மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: உ.வே.சா – பெறலரும் பேறு!

சிறப்புக் கட்டுரை:  உ.வே.சா – பெறலரும் பேறு!

-நிலவளம் கு.கதிரவன்

தமிழின் தொன்மையும், தமிழர்களின் வரலாற்று விழுமியங்களும், ஓலைச் சுவடிகளில் இருந்து வெளிவராத காலத்தில், 19ஆம் நூற்றாண்டில் பிறந்த தமிழ்த் தாத்தா என்று எல்லோராலும் புகழப்பட்ட உ.வே.சாமிநாத ஐயரவர்களால் வெளிக்கொணரப்பட்டு, மரபார்ந்த தமிழின் புகழ் தரணியெங்கும் புகழ் மணம் வீசியது.

19.02.1855இல் பிறந்த ஐயரவர்கள் தமது ஐந்தாம் அகவை முதல் இப்பூவுலகை விட்டு மறையும் காலம் வரை தமிழுக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர். தாம் சேகரித்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்தேடுகளையும் கொண்டு 90க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். எழுத்தாளர், கவிஞர், உரையாசிரியர், பேராசிரியர், தமிழறிஞர், பதிப்பாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். தமிழையே தெய்வமாகப் போற்றியவர்.

“இம் முயற்சியிற் புகுத்தி நடத்தி ஊக்கமளித்து அடியேனைப் பாதுகாத்தருளும் தமிழ்த் தெய்வத்தை அனவரதமும் வந்திக்கின்றேன்” என்று சிலப்பதிகார முகவுரையில் தெரிவிக்கிறார் உ.வே.சா. அவர் பதிப்பித்த நூல்களுக்கான முகவுரை, மற்றவர் எழுதிய, பதிப்பித்த நூல்களுக்கான அணிந்துரை, கருத்துரை, வாழ்த்துரை போன்றவற்றை இக்கட்டுரை ஆய்கிறது.

முகவுரையை அறிமுகப்படுத்திய உ.வே.சா

தமது ஆழ்ந்த புலமையாலும், கற்றல், கற்பித்தலாலும், பட்டறிவாலும் பெற்ற அனுபவத்தின் மூலம் சுவடிகளில் இருந்த சிற்றிலக்கியங்கள், கோவைகள், உலாக்கள், புராணங்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவற்றை பதிப்பித்து வெளியிட்டார் உ.வே.சா. தமது பதிப்புகளில் முகவுரை எழுதி வெளியிட்டு, முகவுரை முறைமை என்ற பதிப்புலகின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு வழி வகுத்தவர். “முகவுரை, மூலப்படிகளின் நிலை, சொற்பொருள் விளக்கம், மேற்கோள் விளக்கம், சொற்பொருள் விவரம், அருஞ்சொற்பொருள் அகராதி, கிடைத்த படிகளின் நிரல் முறை, அச்சிட உதவியோர் விவரம் என எல்லாம் நிறைந்து, உ.வே.சா பதிப்பு ஆய்வுப் பதிப்போடு, அறிவு ததும்பும் பதிப்பு என்று அனைவரையும் போற்றச் செய்தது” என்று கூறுகிறார் அவ்வை.நடராசன்.

“அக்காலத்தில் அச்சிடப்பெற்ற தமிழ்ப் புத்தகங்கள் பலவற்றில் முகவுரை முதலியன காணப்படவில்லை. அவையிருந்தால் படிப்பவர்க்கு மிக்க உபயோகமாயிருக்கும் என்பதை உணர்ந்த நான் (சிந்தாமணிக் காப்பியத்தைப் பதிப்பித்தபோது) அதற்கு அங்கமாக அவற்றை எழுதிச் சேர்த்துப் பதிப்பிக்கலாமென எண்ணினேன். என்ன என்ன விஷயங்களை முகவுரையில் எழுத வேண்டுமென்பதைப் பற்றி ஆலோசித்தேன். நூலைப் படிப்பதற்கு முன் அதிலுள்ள முக்கியமான செய்திகளையும், நூலின் பெருமையையும், உரையின் தன்மை முதலியவற்றையும் படிப்போர்கள் தெரிந்து கொள்வது நலமென்பது என் கருத்து” என உ.வே.சா தம் சிந்தாமணிப் பதிப்பின் முகவுரையில் குறிப்பிடுகிறார்.

ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது அதில் அடங்கியுள்ள செய்திகளை, பழக்க வழக்கங்களைத் தொகுத்தும், விரித்தும் முகவுரையில் தர வேண்டும் என்பது உ.வே.சா அவர்களின் எண்ணமாக இருந்தது. அவர் எந்தெந்த நூல்களுக்கு முகவுரை எழுதுகிறாரோ, அவற்றுக்கு இலக்கண விளக்கம் அளிக்க வேண்டியிருப்பின் அவற்றையும் தருகிறார். இந்நடைமுறை பின்னால் வரும் ஆய்வாளர்களுக்குப் பெருந்துணையாய் அமைந்தது. அதேபோன்று தமது முகவுரைக்கு முன் கடவுள் வாழ்த்துப் பாடலை வைப்பதையும் கடமையாகக் கொண்டிருந்தார். தமது சிலப்பதிகார மூலமும், அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் நூலில் ‘சிந்தித் தெழுவார்க் குநெல்லிக் கனியே / சிறியார், பெரியார் மனத்தே றலுற்றான்’ என்கிற சுந்தரர் அருளிய தேவாரம் 7ஆம் திருமுறைப் பாடலை கடவுள் வாழ்த்தாக வைத்துள்ளார்.

சிறப்பதிகாரமா, சிலப்பதிகாரமா?

சிறப்பதிகாரமா, சிலப்பதிகாரமா என்கிற ஐயம் தோன்றியபோது சிலப்பதிகாரம்தான் என்று நிறுவியவர் உ.வே.சா. சிலப்பதிகார நூல் முகவுரையில் “சிலம்பு காரணமாகத் தெரிவித்தலின், இந்நூல் சிலப்பதிகாரமென்னும் பெயர் பெற்றது. முத்தமிழும் விரவப் பெற்றதாதலின், இந்நூல் இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலைச் செய்யுளென்றும், நாடக உறுப்புகளை உடைத்தாதலின் நாடகக் காப்பியமென்றும், உரைப்பாட்டும் இசைப்பாட்டும் இடையிடையே விரவப் பெற்றதாதலின் உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுளென்றும் பெயர் பெறும்” என்று கூறியதோடு, சிலப்பதிகாரம்தான் என்று நிறுவுவதற்கு, தொல்காப்பியம் செய்யுளியல், 173ஆம் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர், பாட்டிடைவைத்த குறிப்பினானுமென்பது, ஒரு பாட்டினை இடையிடைக் கொண்டு நிற்குங் கருத்தினான் வருவனவும்; எடுத்துக் காட்டாக, அவை தகடூர் யாத்திரையும் சிலப்பதிகாரமும் போல்வன என்றும், “தொன்மைதானே, உரையொடு புணர்ந்த பழமை மேற்றே (237) என்பதுரையில் அவை பெருந்தேவனார் செய்த பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன சிலப்பதிகாரமும் அதன்பாற்படும்” என்றும் எழுதியிருத்தல் இங்கே அறியத் தக்கது என்கிறார்.

மேலும், “சிந்தா மணியாஞ் சிலப்பதிகா ரம்படைத்தான்” ( தணிகையுலா, 526 ) எனச் சிலேடையில் இந்நூற்பெயர் அழகுற அமைந்திருத்தலையும் ஆதாரத்தோடு முகவுரையில் நிறுவுகிறார்.

சிலப்பதிகாரம் நடந்த காலமும், இளங்கோவடிகள் காலமும் ஒன்றென்றும், இது முதலில் தமிழிலேயே அவராற் செய்யப்பட்டதென்றும், இந்நூற் பதிகச் செய்யுளாலும், வரந்தரு காதையாலும் விளங்குகின்றமையின், இச் சரித்திரம் வேறு பாஷையிலிருந்து வந்ததென்று சொல்வதற்கிடமில்லை என்ற கூடுதல் தகவலையும் தருகிறார் உ.வே.சா.

முகவுரையில் கிடைக்கும் முழுமை

உ.வே.சா அவர்களின் முகவுரையை வாசித்தாலே அந்நூலின் நோக்கப் பொருள், மேற்கோள்கள், உரையாசிரியர் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளலாம். சிலப்பதிகார முகவுரையில் இளங்கோவடிகள் வரலாறு, அரும்பதவுரையாசிரியர் வரலாறு, அடியார்க்கு நல்லார் வரலாறு, சிலப்பதிகாரத்தாலும், உரைகளாலும் தெரிந்த அரசர்களின் பெயர்கள், சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம், சிலப்பதிகார மூலமும், அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், குறிப்புரையும், விளங்கா மேற்கோளகராதி, அரும்பத முதலியவற்றின் அகராதி, எடுத்துக்காட்டிய நூற் பெயர்களின் முதற் குறிப்பகராதி, பரிசோதனைக்குக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளின் விவரங்கள், பரிசோதனைக்குக் கிடைத்த மூலப் பிரதிகளின் அட்டவணை போன்றவற்றை விரித்துக் கூறியுள்ளார்.

இம்முகவுரையில், “சிலப்பதிகாரப் பதிப்பில் உள்ள அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாருரை போன்றவை, அரும்பதவுரையிலுள்ள சில குறிப்புகளால் அவ்வுரைக்கு முன்பும் இந்நூற்கு வேறு பழைய உரை ஒன்று இருந்திருக்கலாமென்றும் தோற்றுகிறது. அவ்வுரை இக்காலத்து அகப்படவில்லை” என்றும் பதிவு செய்து தமது ஆய்வுப் புலமையை வெளிப்படுத்துகிறார். நச்சினார்க்கினியர் உரையை ஆய்வு செய்த உ.வே.சா, அவ்வுரையாசிரியர் மேற்கோள் காட்டிய நூற்பெயர், ஆசிரியர் பெயர் போன்றவற்றை பதிவு செய்வதைத் தவிர்த்த காரணத்தினால், அம்மேற்கோள்களுக்கெல்லாம் உரிய நூலின் பெயர், உரையாசிரியர் பெயர் போன்றவற்றை கண்டறிந்து, தாம் பதிப்பித்த நூலில் பதிவு செய்தவர் ஐயரவர்கள் என்பது இங்கு நோக்கத்தக்கது.

பதிப்பாளர்கள் பற்றி உ.வே.சா

உ.வே.சா அவர்கள் தாம் பதிப்பித்த நூல்களுக்கு முகவுரை எழுதியதோடு, பிறர் பதிப்பித்த நூல்களுக்கு மதிப்புரை, கருத்துரை, அணிந்துரை ஆகியவற்றை எழுதியுள்ளார். 1925க்குப் பின்னர்தான் மற்றவர் எழுதிய, பதிப்பித்த நூல்களுக்கு அணிந்துரை, வாழ்த்துரை முதலியன எழுதும் வழக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆனால், தாம் பதிப்பித்த நூல்களுக்கு யாரிடமும் அணிந்துரையோ, கருத்துரையோ வாங்கி பதிப்பிக்கும் நடைமுறையைப் பின்பற்றவில்லை.

1925ஆம் ஆண்டு, சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்ப் பண்டிதர் இ.வை.அனந்தராமைய்யர் பதிப்பித்த கலித்தொகை மூலமும், நச்சினார்க்கினியர் உரையும் நூலில் எழுதிய அபிப்பிராய உரையே, உ.வே.சா அவர்கள் அளித்த முதற் கருத்துரையாகக் கருதப்படுகிறது. இக்கருத்துரையில், “சிறந்த ஒரு நூல் எத்தனை வகையாக ஆராய்ச்சி செய்து பதிப்பிக்கப்பட வேண்டுமோ, அத்தனை வகையில் சிறிதும் குறைவின்றி, ஆராய்ச்சி செய்து இப்புத்தகம் விளங்குகிறது. இப்பதிப்பிலுள்ள விசேடங்களெல்லாம் இதன் முகவுரையைப் படிப்பவர்களுக்கு நன்கு விளங்குமாதலின், இங்கே அவற்றை எழுதவில்லை” என்று கூறியவர், பதிப்பாளராகத் தாம் எதிர்கொண்ட இன்னல்களை, அனுபவ உரையாகத் தொடர்ந்து கூறுகிறார். “தமிழ்ப் பாஷாபிமானிகள் இதனை வாங்கிப் படித்து, இந்தன் முயற்சியிற் சிறிதும் சலிப்படையாதபடி, இப் பதிப்பாசிரியர்க்குப் பொருளுதவி செய்து ஊக்கமளிப்பார்களாயின், அவ்வுதவி தமிழ்ப் பாஷைக்கே செய்த பெரியதோருதவியாகு மென்பதிற் சந்தேகமில்லை. எந்தக் காரியத்திற்கும் பொருள் இன்றியமையாததென்பது யாவரும் அறிந்ததன்றோ?” என்று எழுதுகிறார். இதை வாசிக்கும்போது ஐயரவர்கள் சிந்தாமணி பதிப்பிற்காகப் பொருளுதவி தேடி சிரமப்பட்டதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

உ.வே.சா.வின் பங்களிப்புகள்

1929இல் திருச்சி மருங்காபுரி ஜமின்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி எழுதிய ‘திருக்குறள் தீபாலங்காரம்’ என்ற வசன நூலுக்கு முகவுரையும், அதே ஆண்டு திருநெல்வேலி பரமசிவன் பிள்ளை என்பவரின் திருக்குறள் பரிமேலழகர் உரையைத் தழுவி ‘திருக்குறட் சாரம்’ நூலுக்கு அணிந்துரையும், அதே ஆண்டு ச.சோமசுந்தர பாரதியார் எழுதிய ‘திருவள்ளுவர்’ என்ற வசன நூலுக்கு ஒரு மதிப்புரையும், 1933இல் சி.சு.சுப்பிரமணிய முதலியார் எழுதிய ‘சேக்கிழார்’ நூலுக்கு மதிப்புரையும், 1934இல் T.A.ரத்தினம்பிள்ளை எழுதிய ‘The Life of Rao Bahadur C.W.Thamotharam Pillai’ நூலுக்கு முன்னுரையும், 1935இல் சேலம், நாமக்கல் வட்டம், சேந்தமங்கலம் பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளவர்களின் சரித்திரம், நல்லுபதேசங்கள் அடங்கிய ‘ஸ்வம்ப்ரகாச விஜயம்’ என்னும் வசன நூலுக்குச் சிறப்புரையும் எழுதியுள்ளார் உ.வே.சா.

1936இல் கால்நடை மருத்துவ நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்த வெ.ப.சுப்பிரமணிய முதலியார் அவர்களின் ‘கம்ப ராமாயண சாரம் பால காண்டம்’ நூலிற்கு முகவுரையும் எழுதியதோடு, சங்க இலக்கியங்கள், நாடகங்கள், காப்பியங்கள் போன்ற பிறர் எழுதிய நூல்களுக்கும் அணிந்துரை, முகவுரை, கருத்துரை எழுதியுள்ளார். 1937இல் வானமாமலை மடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீமத் அனந்தகிருஷ்ணையங்கார் இயற்றிய ‘திருப்பேரைக் கலம்பகத்திற்கு’ மதிப்புரை எழுதியுள்ளார். 1936இல் இவர் இயற்றிய ‘திருவரங்கச் சிலேடை மாலை’ நூலைப் பதிப்பித்து வெளியிட்டவர் உ.வே.சா என்பது குறிப்பிடத் தக்கது.

1938இல் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழாசிரியர் வித்வான் அ.கு.ஆதித்தர் எழுதிய ‘சகுந்தலா’ நாடகத்திற்கு மதிப்புரையும், 1939இல் பி.கோதண்டராமையரின் ‘ஸ்ரீ அரவிந்தரும், அவரது யோகமும்’ என்ற உரைநடை நூலுக்கு நூன்முகமும் எழுதியுள்ளார். 1940இல் கி.வா.ஜகந்நாதையரின் ‘தமிழ்க் காப்பியங்கள்’ என்ற நூலுக்கு முன்னுரையும், 1941இல் வீ.கண்ணைய நாயுடு அவர்களின் ‘கலிங்கத்துப் பரணி - பதவுரை, விளக்கவுரை’ நூலுக்கு மதிப்புரையும், 1941இல் ‘திவ்யபிரபந்த திவ்யார்த்த தீபிகை’ என்ற நூல் எழுதிய உ.வே.அண்ணங்கராச்சாரியர் எழுதிய ‘வால்மீகி ராமாயண வசனம்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு மதிப்புரையும் எழுதியுள்ளார்.

உ.வே.சா அவர்கள் தமது அணிந்துரை, மதிப்புரை, கருத்துரைகளில் பதிப்பித்தல் துறையில் எதிர்நோக்கும் சவால்கள், பிற அறிஞர்களின் திறமையைப் போற்றுதல், தமது பதிப்புத் தொழிலுக்கு உந்துசக்தியாக இருந்த நல்லறிஞர்களுக்கு நன்றி தெரிவித்தல் போன்றவற்றை தவறாமல் குறிப்பிட்டிருப்பதை அவரின் முகவுரை, அணிந்துரைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இருந்தமிழே உன்னால் இருந்தேன்

தமிழ்மீது கொண்ட காதலால் தமது அயராத உழைப்பின் மூலம் மூலபாடம் தேடி, ஏடு தேடி தமிழறிஞர்கள் வாழும் ஊர்களுக்கெல்லாம் பயணம் செய்து சுவடிகள் சேகரித்து, முறைப்படுத்தி, நன்கு ஆய்வு செய்து, ஒப்பிட்டு பழம்பெரும் இலக்கியங்களையும், புராணங்களையும், காப்பியங்களையும், சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தவர் உ.வே.சா. தமது இறுதிக் காலம் வரை தமிழ்த் தொண்டே தமது மூச்சாகக் கொண்டு ஏடு தேடி அலைந்த ஊர் எத்தனை, எழுதியாய்ந்த குறிப்புரை எத்தனை என்பது போல், இருந்தமிழே உன்னால் இருந்தேன் / இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்று சத்திய வாழ்க்கை வாழ்ந்தவர் உ.வே.சா.

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதியார் கூறியது போல் உ.வே.சா ஓர் அகத்திய முனி, கும்பமுனி என்றால் அது மிகையாகாது. தமிழ் வாழும் வரை அவர் வாழ்வார். அவர் பதிப்புகள் வாழும். அவரது அயராத உழைப்பும், எழுத்தும், பேச்சும், ஆய்வுத் திறமும் என்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும்.

துணை நின்ற நூல்கள்:

சிலப்பதிகாரம் – அரும்பதவுரை, அடியார்க்குநல்லாருரை, டாக்டர் உ.வே.சாமிநாதையர், கபீர் அச்சுக் கூடம், சென்னை.

உ.வே.சா அணிந்துரைகள், உங்கள் நூலகம், - முனைவர். திரு.இரா.வெங்கடேசன்.

கட்டுரையாளர் குறிப்பு:

கு.கதிரவன், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த எழுத்தாளர், நாட்டுப்புறக் கலைஞர். செஞ்சி திருக்குறள் பேரவை, தமிழியக்கம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். கர்னாடக இசை அடிப்படையிலான தெருக் கூத்து நிகழ்த்துதலில் நான்கு தலைமுறைகளாக ஈடுபட்டு வரும் குழுவின் நிகழ்த்துக் கலைஞர்.

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon