மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

ஓடும் ரயிலில் டிக் டாக் சாகசம்: ரயில்வே எச்சரிக்கை!

ஓடும் ரயிலில் டிக் டாக்  சாகசம்: ரயில்வே எச்சரிக்கை!

டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி இளைஞர்கள் டிக் டாக் செயலியை முழு நேரமும் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். டிக் டாக் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் தாண்டி சில நேரங்களில் உயிரிழப்புக்கும் வித்திடுகிறது.

குறிப்பாக இந்த டிக் டாக்கில் சாகசம் என்ற பெயரில், பல ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். அந்தவகையில், ஓடும் ரயிலிலிருந்து இறங்கி இளைஞர் ஒருவர் டிக் டாக் செய்யும் வீடியோ பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை ஒரு நொடி நிற்க வைக்கிறது.

ஏழு நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், வேகமாக ஓடும் ரயிலிலிருந்து இறங்கும் அந்த இளைஞர் கீழே விழுந்து கிட்டத்தட்டச் சக்கரத்தின் அடியில் இழுத்துச் செல்லப்படுவதைக் காணமுடிகிறது. நிற்காமல் ரயில் சென்றுகொண்டிருக்க அந்த இளைஞர் சக்கரத்தின் பகுதியிலிருந்து சற்று நகர்ந்துகொள்கிறார். லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஸ்டண்டுக்காக அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோவை நேற்று (பிப்ரவரி 18) பகிர்ந்துள்ள ரயில்வே அமைச்சகம், இதுபோன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இவரைப் பார்த்து மற்றவர்கள் இதுபோன்று முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளது.

ஒரு வேளை அந்த நபர் உயிரிழந்திருந்தாலோ அல்லது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலோ அவரின் உறவினர்கள் வழக்கு தொடுத்திருப்பார்கள். ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு மற்றவர்களை ஊக்குவிக்கும் இதுபோன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களைத் தடுக்க ரயில்வே போலீஸ் கண்காணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

-கவிபிரியா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon