மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடை!

தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடை!

தமிழகத்தில் மக்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் நடமாடும் ரேஷன் கடைகளைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகச் சட்டமன்றத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (பிப்ரவரி 18) இரண்டாவது நாளாக நடைபெற்றது. அப்போது லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன், லால்குடி தொகுதிக்குட்பட்ட பள்ளி வயலில், பகுதி நேர நியாய விலை கடை அமைக்கப்படுமா? குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் மக்கள் நீண்ட தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் நிலை உள்ளது என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு பகுதியில் நியாய விலை கடை அமைக்க 150 ரேஷன் அட்டைகள் தேவை. ஆனால் பள்ளி வயலில் 80 அட்டைகள் மட்டுமே உள்ளது. இதனால் அங்கு பகுதி நேர நியாய விலை கடை அமைக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்க முடியாத பகுதிகளில் நகரும் ரேஷன் கடைகள் செயல்படுத்தப்படும், இது, மலைக் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசின் பொருட்களை பெற உதவும்” என்றார்.

முதல்வர் ஆலோசனையின் பேரில் இந்த நடமாடும் ரேஷன் கடைகளைத் திறக்க ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், 2011ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் 2,424 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon