மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

கசாப்பை இந்துவாக்க போடப்பட்ட திட்டம்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கசாப்பை இந்துவாக்க போடப்பட்ட திட்டம்:   வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்தியா மட்டுமின்றி உலகத்தையே உலுக்கிய 2009 நவம்பர் 26 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், ஒரு வேளை பிடிபடாமல் சுடப்பட்டு இறந்திருந்தால் அவன் ஒரு இந்துவாகவே அடையாளப்படுத்தப்பட்டிருப்பான் என்றும், இதுவே லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் திட்டமாக இருந்தது என்றும் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தனது சுய சரிதை புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இந்தத் தகவல் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

2011 காலகட்டத்தில் மும்பை போலீஸ் குற்றப் பிரிவுத் தலைவராக இருந்த ராகேஷ் மரியா, ‘இப்போது என்னை சொல்ல விடுங்கள்’ (LET ME SAY IT NOW) என்ற தலைப்பில் தனது சுயசரிதைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் கசாப் பெங்களூருவில் வசிக்கும் சமீர் சவுத்ரி என்ற பெயரில் ஒரு போலி அடையாள அட்டையை தயாரித்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“26/11 தாக்குதலை, ‘இந்து பயங்கரவாத தாக்குதல்’ என்று முத்திரை குத்துவதற்கு லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டது. எல்லாமே அவர்கள் திட்டத்தின் படி நடந்திருந்தால், பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப், சமீர் சௌத்ரியாக இறந்திருப்பார். மேலும் தாக்குதலுக்கு ஊடகங்கள்‘ இந்து பயங்கரவாதிகள் ’ என்று குற்றம் சாட்டியிருக்கும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இந்திய முகவரிகளுடன் போலி அடையாள அட்டைகளையும் லஷ்கர் இ தொய்பா தயாரித்தது.

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கசாபின் புகைப்படத்தில், கசாப் தனது வலது மணிக்கட்டில் சிவப்பு நூல் அணிந்திருப்பதைக் காண முடிந்தது, இது ஒரு புனிதமான இந்து நூல் என்று நம்பப்படுகிறது. இதை அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக சொல்ல மும்பை போலீஸுக்கு தடை விதிக்கப்பட்டது” என்றும் ராகேஷ் மரியா தனது புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் புத்தகம் பற்றி கருத்து வெளியிட்டிருக்கும் மும்பையைச் சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் “ மரியா ஏன் இதையெல்லாம் இப்போது சொல்கிறார்? அவர் போலீஸ் கமிஷனராக இருந்தபோது இதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் சில தகவல்கள் இருந்தால், அவர்கள் அதை பணியில் இருக்கும்போதே செயல்படுத்தியிருக்க வேண்டும். இந்து பயங்கரவாதம் என்ற தவறான சித்தரிப்புகளை அம்பலப்படுத்த அன்றைய காங்கிரஸ் ஆட்சி தடையாக இருந்திருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

-வேந்தன்

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon