மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சேலம்: பற்றி எரிந்த தனியார் பேருந்து!

சேலம்: பற்றி எரிந்த தனியார் பேருந்து!

சேலத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வேம்படிதளத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் நோக்கி அலமேலு என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. கந்தப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பேருந்துக்கு அடியிலிருந்து புகை வந்துள்ளது, அதனை அறிந்த ஓட்டுநர் கார்த்தி பேருந்தை நிறுத்தி கீழே இறங்கிப் பார்த்துள்ளார். உடனடியாக பயணிகளைக் கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளார்.

இதனால் ஒரு நிமிடம் பதறிப்போன பயணிகள் பேருந்திலிருந்து அவசர அவசரமாகக் கீழே இறங்கினர். ஆனால் அதற்குள் தீ பிடித்து மளமளவெனப் பேருந்து முழுவதும் பரவியுள்ளது.

தீயினால் பேருந்தின் கண்ணாடிகளும் வெடித்தது பயணிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாகக் கீழே இறங்கினர்.

தீவிபத்து குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள்ளாகவே பேருந்து முழுதும் தீக்கிரையாகியது. இதனால் இன்று காலை அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த போலீசார் போக்குவரத்தைச் சரி செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon