மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சட்டமன்ற முற்றுகை போராட்டம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

சட்டமன்ற முற்றுகை போராட்டம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 5ஆவது நாளாகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சிஏஏ, என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில் நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயத்தில் மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய மக்கள் மன்றத் தலைவரான வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அதில், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் திட்டமிட்டு குழந்தைகளையும் பெண்களையும் பங்கேற்க வைக்கின்றனர். போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், நாளை நடைபெறும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி அளித்தால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை நேற்று விசாரித்த நீதிமன்றம் மனுவாகத் தாக்கல் செய்தால், அது பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது .

இதனையடுத்து வராகி சார்பில் சட்டமன்ற முற்றுகைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இம்மனுவை இன்று (பிப்ரவரி 18) விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் இந்த மனு பட்டியலிடப்படும் போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதனை காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தனர். எனவே திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கவிபிரியா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon