மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

8,888 பணிகளுக்கான காவலர் தேர்வில் முறைகேடு: நீதிமன்றத்தில் வழக்கு!

8,888 பணிகளுக்கான காவலர் தேர்வில் முறைகேடு: நீதிமன்றத்தில் வழக்கு!

8,888 காவலர் பணிகளுக்கான சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குரூப் 4 முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, முந்தைய காலங்களில் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்விலும் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றில் 8,888 பணியிடங்களுக்கான காவலர் தேர்வைச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு என அனைத்து தேர்வுகளும் முடிந்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்துதான் இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் தேர்வானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோன்று விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 விண்ணப்பதாரர்கள் தாக்கல் செய்த மனுவில், விழுப்புரம், வேலூரில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். குரூப் 4 முறைகேட்டைக் காட்டிலும் இந்த தேர்வில் அதிகளவு முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கவிபிரியா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon