மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

பிரசாந்த் கிஷோரால் மாசெக்களின் பவர் பறிப்பா? ஸ்டாலின் விளக்கம்!

பிரசாந்த் கிஷோரால் மாசெக்களின் பவர் பறிப்பா?  ஸ்டாலின் விளக்கம்!

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (பிப்ரவரி 17)அறிவாலயத்தில் நடந்தது. திமுகவின் உட்கட்சித் தேர்தல் பற்றி விவாதிப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடந்தது.

இதுவரை மாசெவாக கீழே அமர்ந்திருந்த கே.என்.நேரு நேற்றைய கூட்டத்தில் முதன்மைச் செயலாளராக மேடையில் அமர்ந்திருந்தார். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷனால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிற மாவட்டப் பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய பேச்சு மாவட்டச் செயலாளர்களிடையே இருந்த ஒரு பெரிய நெருடலை, சந்தேகத்தைத் தீர்த்து வைப்பதாக இருக்கிறது.

பிரசாந்த் கிஷோரை திமுக வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்ததை அடுத்து, மாவட்டச் செயலாளர்கள் பலரும் தங்களுக்கு இருக்கும் பவர் பறிக்கப்படும் என்றும், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளில் பிகேதான் முடிவெடுப்பார் என்றும் பேசிக் கொண்டிருந்தனர். இதுபற்றிய குழப்பத்திலும் இருந்தனர் மாசெக்கள்.

இந்நிலையில் மாசெக்கள் கூட்டத்தில், ஏற்கனவே திமுகவின் பொதுத் தேர்தல் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதை ஒட்டி முதன்மைச் செயலாளர் நேரு சில விளக்கங்களை அளித்த பின் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். அவரது பேச்சில் உட்கட்சித் தேர்தலுக்கு இணையான இடம்பிடித்தது பிரசாந்த் கிஷோர் விவகாரம்தான்.

“எப்போதுமே தேர்தலின் போது பல கட்சிகள் தங்களுக்காக ஒரு சர்வே எடுப்பது வழக்கம்தான். நாம் கூட ஒரு சர்வே எடுத்து அதன் பேரில்தான் நமக்கு நாமே பயணம் எல்லாம் நடத்தினோம் . அந்த சர்வேயை சொல்லாமல் எடுத்தோம், இப்போது சொல்லிவிட்டு அறிவித்துவிட்டு எடுக்கிறோம் அவ்வளவுதான். மாவட்டங்கள் முழுதும் 200 பேருக்கும் மேல் சர்வே எடுத்திருக்காங்க. மார்ச் 10 ஆம் தேதிக்குள்ள எனக்கு ரிப்போர்ட் கொடுக்கப் போறாங்க.

பிரசாந்த் கிஷோரை நாம் ஒப்பந்தம் செய்திருப்பது நமக்கு ஆலோசனை வழங்குவதற்குதானே தவிர, யாரையும் கட்டுப்படுத்துவதற்கோ தலையிடுவதற்கோ இல்லை என்பதை நீங்கள் புரிஞ்சுக்கணும். மாவட்டச் செயலாளர்களான உங்களையும் நிர்வாகிகளையும் நம்பிதான் கட்சி நடத்தப் போறோம்,

ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்...கல்லக்குடி போராட்டத்தில் கண்ணதாசன் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தார். அவரைப் பாக்குறதுக்கு அப்ப ஒருங்கிணைந்த திருச்சி திமுக மாவட்டச் செயலாளர் அன்பிலார் போனார். போகும்போது கலெக்டர் எதிரில் வந்திருக்கிறார். ‘அவரைப் பார்ப்பதற்கு நீங்கள் யார்? எந்த வகையில் அவரை பார்க்கப் போகிறீர்கள்?’ என கேட்டிருக்கிறார்.

அப்போது அன்பிலார், ‘நான் டிஎம்கேவின் டிஸ்ட்ரிக்ட் செகரட்டரி’என்று சொல்லியிருக்கிறார். அப்படின்னா என்ன என்று கலெக்டர் கேட்டிருக்கிறார். அதற்கு அன்பிலார், ‘நீங்க எப்படி திருச்சி மாவட்டத்துக்கு கலெக்டரோ அதேபோல நான் திருச்சி மாவட்ட திமுகவின் கலெக்டர்’ என்று சொன்னார், அந்த அளவுக்கு கெத்து உள்ள பதவி மாவட்டச் செயலாளர் பதவி. அந்த கெத்தையெல்லாம் நீங்க தேர்தலில் காட்ட வேண்டும். உங்களை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறோமே தவிர வேறு யாரை நம்பியும் திமுக இல்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் நன்றாக உழைத்து எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றியைத்தான் பெற்றிருக்கிறோம். அதனால் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் அதிகாரம் போய்விடுமோ அப்படினு கவலைப்படாமல் கெத்தோடு வேலையப் பாருங்கள். மாவட்டச் செயலாளர்களான உங்களை மீறி எதுவும் நடக்காது”என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் பற்றி பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் கோபப்பட்டும் வருத்தப்பட்டும் கருத்துகளை வெளிப்படுத்தியது ஸ்டாலினை சென்று சேர்ந்திருக்கிறது. இந்த நடவடிக்கையால் மாசெக்கள் சோர்ந்துவிடக் கூடாது என்று கருதியே மாசெக்கள் கூட்டத்தில் பிகே விவகாரம் பற்றி தெளிவாகப் பேசி, ‘மாசெக்கள் என்பவர்கள் கலெக்டர்கள்தான் அதில் மாற்றம் எதுவும் இல்லை’என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.

ஆனாலும் மார்ச் 10 ஆம் தேதி ஸ்டாலினிடம் பிகே கொடுக்கப் போகும் முதல் கட்ட அறிக்கையில் என்ன இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் மாசெக்களிடம் இருக்கிறது.

-ஆரா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon