மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

என்.ஆர்.சி, சிஏஏ: தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்!

என்.ஆர்.சி, சிஏஏ: தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்!

டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோன்று ஜாமியா மிலியா மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாமியா மிலியா மாணவர்கள் மீது காவல்துறையினர் இரு முறை தடியடி தாக்குதல் நடத்தியது இந்தியா முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லி ஷாஹின் பாக் போலச் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் தொடர் பகல் இரவு போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டன. ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் நேற்று இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஒருவர் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். போலீசார் பெண்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. வண்ணாரப்பேட்டை தடியடி தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நள்ளிரவிலேயே பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் வெடித்தது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. அதுபோன்று தமிழகம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

போராட்டம் முடிவுக்கு வந்ததாகக் கருதிய நிலையில் இன்று காலை மீண்டும் வண்ணாரப் பேட்டையில் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாகத் தமிழகம் முழுவதும் பல இடங்களில் சாரை சாரையாகச் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதன்படி, “ரத்து செய் ரத்து செய் என்.ஆர்.சி., சி.ஏ.ஏ.வை ரத்து செய்” என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. அதுபோன்று காவல்துறையினரின் தடியடிக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களும் விண்ணைப் பிளந்தன. பல இடங்களில் தேசியக் கொடியுடன் பேரணி சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் மேலப்பாளையத்தில் உள்ள பஜார் திடலில் தமமுக உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் காவல்துறையை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் ரயில் நிலையம் வரை கண்டன கோஷங்களுடன் பேரணி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதுபோன்று சென்னையில் தாம்பரம் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் பேரணிகளும், போராட்டங்களும் நடைபெற்றது. தாம்பரத்தில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் அருப்புக்கோட்டையிலும்,மற்றும் ராமநாதபுரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியலில் ஈடுபட்டனர், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, திருபுவனம் கடைவீதி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

-கவிபிரியா

சனி, 15 பிப் 2020

அடுத்ததுchevronRight icon