மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிஏஏவுக்கு எதிராக போராடினால் தேச விரோதி அல்ல: உச்ச நீதிமன்ற நீதிபதி

சிஏஏவுக்கு எதிராக போராடினால் தேச விரோதி அல்ல: உச்ச நீதிமன்ற நீதிபதி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை தேச விரோதிகள் என்று மத்திய அரசை ஆளும் பிரதமர் உள்ளிட்ட பாஜகவினர் வெளிப்படையாக பேசிவரும் நிலையில், சட்டத்தை எதிர்த்துப் போராட அனைவருக்கும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்து இந்தியாவையோ, முஸ்லிம் இந்தியாவையோ உருவாக்க நினைக்கவில்லை. அவர்கள் குடியரசு இந்தியாவையே உருவாக்கினார்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தெரிவித்தார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பி.டி. தேசாய் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் இன்று (பிப்ரவரி 15) 'இந்தியாவை உருவாக்கும் வண்ணங்கள்' என்ற தலைப்பில் அவர் பேசினார்.

"நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒரு இந்து இந்தியா மற்றும் ஒரு முஸ்லீம் இந்தியா என்ற கருத்தை நிராகரித்தனர். அவர்கள் இந்திய குடியரசை மட்டுமே அங்கீகரித்தனர். இந்திய அரசியலமைப்பு பன்மைத்துவத்தை எதிர்பார்க்கிறது என்றும் எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்தியா என்ற தத்துவத்தின் மீது ஏகபோக உரிமை கோர முடியாது. எனவே பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அடையாளத்தைப் பாதுகாப்பது நமது நேர்மறையான கடமை" என்று கூறினார்.

மேலும் அவர், “ சட்டத்தின் எல்லைக்குள், தாராளமய ஜனநாயக நாடுகள் தங்கள் குடிமக்கள் தங்கள் கருத்துக்களை ஒவ்வொரு முறையிலும் வெளிப்படுத்தும் உரிமையை உறுதி செய்கின்றன. இதில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம். இத்தகைய இந்தியாவில் எதிர்க்கருத்து கொண்டவர்களையும், கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவது ஜனநாயகத்தின் இதயத்தின் மீது நடத்தப்படு தாக்குதலாகும்” என்றும் உச்ச நீதிபதி கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் போது ஏற்பட்ட சேதங்களை மீட்டெடுப்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட எதிர்ப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில்... உத்தரபிரதேச அரசின் பதிலைக் கோரிய உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதி சந்திரசூட்டு இடம்பெற்றிருக்கிறார்.

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon