மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

டிஎன்பிஎஸ்சி மாற்றங்கள்: தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?

டிஎன்பிஎஸ்சி மாற்றங்கள்: தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?

குரூப் 4, குரூப் 2 என டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அடுத்து வரவிருக்கும் தேர்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம், தேர்வு மையங்களைத் தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 15) தேர்வு விதிமுறைகளில் மேலும் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இரு நிலை தேர்வு

அதில், குரூப் 4, குரூப் 2-ஏ போன்ற தேர்வுகளுக்கு பொது அறிவுத் தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டும் இதுவரை நடந்து வருகிறது. இனிவரும் காலங்களில் இந்த தேர்வுகள் முதனிலை மற்றும் முதன்மை தேர்வு என இரு நிலைகளாக நடத்தப்படும்.

தேர்வு நேரங்களில் மாற்றம்

தேர்வர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யத் தேர்வர்கள் 9 மணிக்குத் தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும். சரியாக 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். 10 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை மாலை என இரு வேளைகளிலும் தேர்வு நடைபெற இருந்தால் மாலை நடக்கவேண்டிய தேர்வு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும்.

விடைத்தாள் செல்லாததாக்கப்படும்

இனிவரும் தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொள் குறி வகை தேர்வுகளில் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். எந்த ஒரு வினாவிற்கும் விடை அளிக்கத் தெரியவில்லை என்றால் அதற்குக் கூடுதலாகக் கொடுக்கப்படும் E என்ற வட்டத்தினை கருமையாக்குவதுடன், மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு முறையே, A, B,C,D மற்றும் E விடைகள் நிரப்பப்பட்டது என்ற விபரங்களைத் தனியே பதிவு செய்து அதற்கான உரியக் கட்டங்களை நிரப்ப வேண்டும். இந்த பணிக்காக மட்டும் தேர்வு முடிந்த பிறகு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட விபரங்கள் குறிப்பிடவில்லை என்றால் அந்த விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.

தேர்வு முடிந்த பிறகு எந்த ஒரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் இனங்கான இயலாதவாறு தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பகுதி மற்றும் விடையளிக்கும் பகுதி ஆகியவற்றைத் தேர்வர்களின் முன்னிலையிலேயே தனித்தனியே பிரிக்கப்பட்டு தேர்வு அறையிலேயே சீல் இடப்படும். சீலிடப்பட்ட உரை மீது அறையில் இருக்கும் சில தேர்வர்களிடம் கையொப்பம் பெறப்படும்.

கைரேகை பதிவு

தேர்வர்களுடைய விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையெழுத்துக்குப் பதிலாக இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.

24 மணி நேரமும் கண்காணிப்பு

தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களைப் பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்து வர தற்போது உள்ள முறையை முற்றிலும் மாற்றி அதிநவீன தொழில்நுட்ப ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாகத் தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கக் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்” என பல்வேறு அதிரடி திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது டிஎன்பிஎஸ்சி.

-கவிபிரியா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon