மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

இறந்த மகளைக் கண்ட தாய்: டெக்னாலஜியின் பாய்ச்சல்!

இறந்த மகளைக் கண்ட தாய்: டெக்னாலஜியின் பாய்ச்சல்!

கொரியா நாட்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில், வி.ஆர் தொழில்நுட்பம் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மகளை தாய் ஒருவர் சந்திக்கும் காட்சி இணைய உலகையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

மரணம், எப்போதும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை. உயிரான உறவுகளையும், உயிர் நட்புகளையும் நம்மைவிட்டுப் பிரித்து, சில மரணங்கள் நம்மை தனிமையாக்கிவிடும். நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு நெருக்கமானவர்களை, மீண்டும் ஒருமுறை பார்த்துவிட முடியாதா என்ற ஏக்கம் பலரது மனதிலும் இருக்கும் என்பது உண்மை தான். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட அந்த விஷயம் சாத்தியமற்றதாகவே பலரும் கருதி வந்தனர். அறிவியலும், தொழில்நுட்பமும் அபார வளர்ச்சி கண்டிருக்கும் இந்தக் காலத்தில் ‘சாத்தியமற்றது’ என்ற வார்த்தைக்குக் கூட இடமில்லை என்பதை நிரூபித்துள்ளது கொரியா நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று.

விர்சுவல் ரியாலிட்டி எனப்படும் வீ.ஆர் தொழில்நுட்பத்தின் மூலமாக நிகழ்காலத்தில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களுடனும் கற்பனையான ஒரு உலகை உருவாக்க முடியும். நம்மால் சென்றடைய முடியாத தொலைவையும், நேரில் பார்க்கவே இயலாத காட்சிகளையும் கண்முன் கொண்டு நிறுத்த முடியும் என்பது தான் இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சம். அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் நான்கு வருடங்களுக்கு முன்னர் இறந்த குழந்தையை மீண்டும் தாயுடன் சந்திக்க வைத்துள்ளனர்.

தென்கொரியா தொலைக்காட்சியில் ‘மீட்டிங் யூ’ என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் விருப்பப்படி அவர்கள் இழந்த உறவுகள் அல்லது நண்பர்களுடன் இருப்பதுபோன்ற சூழலை வி.ஆர் தொழில் நுட்பத்தின் மூலமாக மீண்டும் உருவாக்கித் தருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் ஜாங் ஜி சங் என்ற பெண் ஒருவரும் கலந்துகொண்டார். 2016-ஆம் ஆண்டு தனது மகள் நயோன் மர்ம நோயால் மரணமடைந்தது குறித்தும், அவரது இழப்பு குறித்தும் அவர் பேசியது அனைவரையும் கலங்கச் செய்தது.

தொடர்ந்து ஜாங் ஜி சங்கின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது மகளை சந்திக்க வைக்க அந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. வி.ஆர்.தொழில்நுட்பம் மூலம் எதார்த்தமான உணர்வு கிடைப்பதற்கு ஏற்ற வகையில் சிறப்புக் கண்ணாடி மற்றும் கையுறைகளை ஜாங் ஜி சங் அணிந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, நிகழ்ச்சிக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அந்த வீடியோ ஆரம்பமானதும், தனது மகளைத் தேடி மெய்நிகர் உலகிற்குள் ஜாங் ஜி சங் நுழைகிறார். ‘அம்மா....அம்மா..’என்று ஆசை ததும்ப அழைத்தவாறே அவரைத் தேடி நயோன் ஓடிவருகிறார். இனிபார்க்கவே முடியாது என்று எண்ணி இருந்த தனது மகளைக் கையருகே கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் அந்தத் தாய் நிலைகுலைந்து போகிறார்.

இருவரும் அக்கரையுடன் விசாரித்துக் கொள்கின்றனர். தங்கள் பாசத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். தன் மகளுடன் விளையாடியும், அவருக்கு உணவு அளித்தும், ஆசைதீரப் பேசியும் அந்த அம்மா தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொள்கிறார். மகள் பாடும் பாடலை மகிழ்வுடன் கேட்கிறார். தொடர்ந்து தனது மகளுக்கு மென்மையாக வருடிக் கொடுத்து அவரைத் தூங்க வைக்கிறார். அதன் பின்னர் சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாக அந்தத் தாயை விட்டு அவரது மகள் பறந்துசெல்கிறார். அவர் மறைந்து சென்ற பிறகும் தனது மகளைப் பார்க்க வேண்டும் என்ற பேராசை நிறைவேறிய திருப்தியில் ஜாங் ஜி சங் உறைந்து நிற்கிறார். இவ்வாறாக அந்த வீடியோ நிறைவு பெறுகிறது.

பலரையும் கண்கலங்க வைத்த அந்த காணொலியை ஒருபுறம் பலரும் பாராட்டி வருகிறார்கள் என்றால் மறுபுறம் கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. மரணமடைந்த மகளைப் பார்ப்பதற்கான சூழல் அந்த அப்பாவி அம்மாவிற்கு நிச்சயம் பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால் மீண்டும் அவரை இழந்த வலி எத்தகைய மன உளைச்சலுக்கு அவரை ஆட்படுத்தும் என்று கேட்டு பலரும் ‘மீட்டிங் யூ’ நிகழ்ச்சிக்கு எதிர்ப்புக் குரலுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon