மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

‘வீதிக்கு வாங்க’: ரஜினியைத் தேடும் நெட்டிசன்கள்!

‘வீதிக்கு வாங்க’: ரஜினியைத் தேடும் நெட்டிசன்கள்!

சிஏஏ-வுக்கு எதிராகப் போராடிய இஸ்லாமிய மக்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ‘இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்றால் முதலில் வருவேன்’ என்று கூறிய ரஜினி எப்போது களத்திற்கு வருவார் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில் நேற்று(பிப்ரவரி 14) போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசாரால் தடியடித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீதிக்கு வாங்க ரஜினி என்னும் ஹேஷ்டேக் டிவிட்டர் தளத்தில் பலராலும் பயன்படுத்தப்பட்டு இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

‘உரிமைக்காகப் போராடுவோம், புரட்சி செய்வோம்’ என்றெல்லாம் தனது திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் எழுச்சியாகப் பேசிவந்தார். அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் உயர்ந்தது. ஆனால் ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்போது?’ என்பது விடை தெரியாத ஒரு கேள்வியாகவே தமிழகத்தில் நிலவி வருகிறது. தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாகத் திகழ்ந்து வந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவிற்குப் பின்னரே அரசியல் ஆசை மனதில் இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கவும் களத்திற்கு வரவும் தொடங்கினார்கள்.

ஆனால் அப்போது கூட ‘விரைவில் கட்சி ஆரம்பிப்பேன். தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்பதே ரஜினிகாந்தின் நிலைப்பாடாக இருந்துவந்தது. இந்த நிலையில் சமீபகாலமாக ஆளும் மத்திய அரசிற்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசிவரும் ரஜினிகாந்த் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். துக்ளக் விழாவும், ரஜினியின் பெரியார் குறித்த கருத்தும் பெரும் விவாதத்திற்கு வித்திட்டது. தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் பெரும் எதிர்ப்பைப் தெரிவித்து போராடி வந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகவும் ரஜினிகாந்த் பேசினார். ‘குடியுரிமைச் திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் இஸ்லாமியர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது’ என்று கூறியவர் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அவர்களுக்காக நான் முதலில் குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

\

இந்த நிலையில், தற்போது வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘ரஜினி கூறிய கருத்தை ரஜினியே மறந்துவிடாரா?’ என்று கேட்டு பலரும் ட்வீட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக ரஜினி களத்திற்கு வரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தும், மெளனம் காத்துவரும் ரஜினியைக் கிண்டல் செய்யும் விதமாகவும் வீதிக்கு வாங்க ரஜினி என்னும் ஹேஷ்டேக்குடன் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அத்துடன் வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய மக்கள் மீது தடியடி நடத்திய வீடியோவைப் பகிர்ந்தும் சிலர் ரஜினியைக் குறிப்பிட்டு கோபமுடன் ட்வீட் செய்துள்ளனர்.

போலீசாரின் தாக்குதலுக்கும், 200-க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அத்துடன் ரஜினிகாந்த் ஏன் வீதிக்கு வரவில்லை என்பதையும் கோபத்துடன் கேட்டுள்ளார்.

“இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆளாக நான் நிற்பேன் என சொன்னது நீ தான, சொல் சொல்? எங்க ரஜினிகாந்த் சார் ஆள காணோம். கேட்ட திறந்த உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம், அதே கேட்ட மூடி, முடித்து வைக்கவும் தயங்காது” எனத் தெரிவித்துள்ளார்.

போராட்டமும், போலீசாரின் தாக்குதலும் மட்டுமின்றி ‘வீதிக்கு வா ரஜினிகாந்த்’ ஹேஷ்டேக்கும் இணைய உலகின் முக்கிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 15 பிப் 2020