மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

தேர்தல் பிரச்சாரம் : எடப்பாடியின் சுற்றுப்பயண ஆபரேஷன்!

தேர்தல் பிரச்சாரம் : எடப்பாடியின் சுற்றுப்பயண ஆபரேஷன்!

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார். இதற்காக வரும் மார்ச் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .

தமிழகத்தில் தற்போது 24 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான பன்னீர் செல்வம், “11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது” என்று அறிவித்தார்.

இந்நிலையில், முதல்கட்டமாக 8 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க, மார்ச் மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுவார் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் மத்திய சுகாதாரத் துறைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ”மார்ச் மாதம் 1ஆம் தேதி காலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிக்கும் மற்றும் பிற்பகலில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும் 5ஆம் தேதி காலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கும், பிற்பகலில் கரூர் மற்றும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரிகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மார்ச் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன் பின்னணி பற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம், ”எற்கனவே மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை: மாநிலம் முழுதும் பயணம்: எடப்பாடிக்கு அமைச்சர்கள் போடும் பிரேக்! என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதில் ’எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டார். அடுத்து கட்சியை பிடிக்கப் போகிறார் என்றெல்லாம் ஊடகங்களில் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எதார்த்தம் என்னவென்றால் எந்த மாவட்டத்திலும் சென்று மிகப்பெரிய அளவுக்கு நலத்திட்ட விழாவை நடத்த முடியாத நிலையில்தான் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற ஒரு விழாவை காரணம்காட்டி அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகள் அரசு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது .அதன்பிறகு முதலமைச்சர் எடப்பாடி பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற வாய்ப்புகள் அதிகமாக ஏற்படுத்தப்படவில்லை. அமெரிக்காவெல்லாம் செல்கிற முதல்வரால் தனது அமைச்சர்களை மீறி மாவட்டங்களுக்குள் செல்ல முடியவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது

இந்நிலையில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் அரசு நிகழ்ச்சி ஒவ்வொன்றையுமே, அரசியல் நிகழ்ச்சியாக பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே அமைச்சர்களை மீறி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த எடப்பாடி தேர்தலுக்காக அதை மாற்றி தன்னை முன்னிலைப்படுத்துவதற்கு அரசு விழாக்களை பயன்படுத்த முனைந்துவிட்டார். அதன் ஒருபகுதியாகத்தான் ஒவ்வொரு மாவட்ட மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கும் நேரில் செல்ல எடப்பாடி திட்டமிட்டுள்ளார்” என்கிறார்கள்.

முன்னதாக, சேலம் கூட்டுரோட்டில் ஆசியாவிலேயே மிகப் பெரியதாக அமையவுள்ள கால்நடை பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார் என்பதும், அந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை தாக்கி அரசியல் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon