சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர் கூட்டமைப்பின் சார்பில் நேற்று இரவு (14.02.20) நடந்த போராட்டத்தில் , போலீசார் தடியடி நடத்தினர். இரவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல் ஆணையர் விஸ்வநாதன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆணையர் ஆலோசனை நடத்தினார். வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்தும், சட்ட ஒழுங்கு நிலைமை மற்றும் தொடர் போராட்டம் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரிகளைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மருத்துவமனைகளில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வண்ணாரப்பேட்டை சம்பவத்தால் காயமடைந்த இணை ஆணையர் விஜகுமாரியை அப்பல்லோ மருத்துவமனையில் சென்று பார்த்தேன். அதுபோல ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு காவலர் மற்றும் இரு பெண் காவலர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன். இங்குப் பொதுமக்கள் யாராவது காயமடைந்து அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று விசாரித்தோம். ஆனால் அப்படி யாரும் இங்கு அனுமதிக்கப்படவில்லை. ஒருவேளை அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்களையும் சந்தித்திருப்பேன்.
இதுபோன்ற ஒரு சூழலில் அனைவரும் அமைதி காக்க வேண்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பக்கூடாது. சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்கும் மக்கள் வாழும் மாநிலம் தமிழ்நாடு. எனவே மக்கள் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். சென்னையில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
-கவிபிரியா