மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

வண்ணாரப்பேட்டை சம்பவம் : 'பிப்ரவரி 14 கறுப்பு இரவு'!

வண்ணாரப்பேட்டை சம்பவம் : 'பிப்ரவரி 14 கறுப்பு இரவு'!

வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ”பிப்ரவரி 14ஆம் தேதி இரவு கறுப்பு இரவு” என்று தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் தடியடி நடத்திய தகவல் தமிழகம் முழுவதும் பரவியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.

இறுதியாகச் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் இன்று காலை முதல் பல்வேறு இடங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு நடந்த சம்பவத்தின் போது இணை ஆணையர் கபில்சிபில் குமார், ராஜமங்கலம் காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட 5 பேர் காயம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வண்ணாரப்பேட்டையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடப்பதைப் பார்த்தால் டெல்லி எஜமானர்கள் சினம் கொள்வார்களே என எண்ணிய அதிமுக அரசு, காவல்துறையை ஏவி அப்பெருங்கூட்டத்தைக் கலைக்க முடிவெடுத்தது. நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு, அமைதியாக இருந்த பொதுமக்கள் மீது, எந்த விதக் காரணமுமின்றி, தடியடிப் பிரயோகம் செய்து அராஜகம் செய்துள்ளார்கள். பெண்களின் பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். தாக்குதலில் பலரும் ரத்தக் காயமடைந்துள்ளனர் .ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை, வேண்டுமென்றே தடியடி நடத்திக் கலைத்து, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்திரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை. பிப்ரவரி 14ஆம் நாள் இரவு என்பது 'கறுப்பு இரவு' என்று சொல்லத்தக்க வகையில் மாறிவிட்டது.

ஜனநாயகத்தைத் தானும் காப்பாற்றாமல், ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் ஆவேசமாக அடித்து விரட்டும் அராஜக ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி மாறிவருவதன் அடையாளம் தான், வண்ணாரப்பேட்டை நிகழ்வுகள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய கடமை காவல்துறையினருக்கு உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு,போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “சென்னையில் சில நாட்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடத்தப் பெண்கள் முயன்றபோது, வேறு இடத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதிப்பதாகச் சொன்ன காவல்துறை தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.

இச்சூழலில், வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தைப் பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க நேரடியாக அங்குச் சென்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பிஆர், என்ஆர்சி மற்றும் சிஏஏ ஆகிய கறுப்புத் திட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-கவிபிரியா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon