மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை: போலீஸ்!

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்  யாரும் இறக்கவில்லை: போலீஸ்!

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர் ஒருவர் இறந்து விட்டதாகத் தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என்று சென்னை போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியக் கூட்டமைப்புகள் நேற்று போராட்டம் நடத்தின. அப்போது போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியும் செல்லாததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 120 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவில் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் கலந்துகொண்ட முதியவர் ஒருவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இது மட்டுமின்றி உயிரிழந்த முதியவர் ஒருவரின் புகைப்படமும் பகிரப்பட்டு காவல்துறையினருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்," 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது இறந்து விட்டதாகச் சிலர் வேண்டுமென்றே பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றனர். போராட்டத்தின் போது யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்துவிட்டார் என்ற பொய் தகவலைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.

-கவிபிரியா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon