மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடி: தமிழகம் முழுதும் வெடித்த போராட்டம்!

வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடி: தமிழகம் முழுதும் வெடித்த போராட்டம்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.

சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் இத்திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஷாகீன்பாக்கை போன்று வண்ணாரப்பேட்டையிலும் இரவு பகலாகப் போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டன. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதுமட்டுமின்றி தொடர்ச்சியாகச் சென்னையில் போராட்டம் நடத்தத் தடை விதித்தார் காவல் ஆணையர் ஏ,கே.விஸ்வநாதன்.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 14) மதியம் முதல் இஸ்லாமிய கூட்டமைப்புகள் வண்ணாரப்பேட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டன. நேற்று மாலை போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த போலீசார் அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதற்கு மறுப்புத் தெரிவித்ததால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

பின்னர் சுமார் 120 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தின் போது முதியவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. இதுமட்டுமின்றி ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பெண்களையும் ஆண் போலீசார் கடுமையாகத் தாக்கியதாக குற்றம்சாட்டினர்.

போலீசாரின் நடவடிக்கை போராட்டக்காரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து பரவத் தொடங்கிய போராட்டத் தீ சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவியது.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்திக் கிண்டி, ஆலாந்தூர், செங்கல்பட்டு,ஈசிஆர், திண்டிவனம், திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டன.

கோவை ஆத்துப்பாளையம் பகுதியில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். சேலத்தில் நடந்த போராட்டத்தின் போது பேருந்துகளை நிறுத்தி மறியலில் ஈடுபட்டதாகவும், இதனால் அங்கு சில மணி நேரம் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று, திருப்பூர் சிடிசி கார்னரில் 100க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தென்காசி அருகே கடையநல்லூர் பகுதியிலும், மதுரையில் வில்லாபுரம் அருகே விமான நிலையம் செல்லும் சாலையிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் தடியடியைக் கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலும், கண்டோன்மெண்ட் எம்.ஜி.ஆர் சிலை பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.

கடலூரில் பண்ருட்டி, சிதம்பரம், லால்பேட்டை ஆகிய பகுதிகளிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், நாகர்கோயில் ஆகிய பகுதிகளிலும் நேற்று இரவு போராட்டம் வெடித்தது. இவ்வாறு சென்னை முதல் கன்னியாகுமரி வரை போராட்டம் நடைபெற்றது என்பது தமிழக முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகளுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதோடு சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை மனு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட 120 பேரும் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். அதுபோன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கலைந்து சென்றனர்.

கவிபிரியா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon