மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

குறைகளைக் கொட்டித்தீர்த்த செவிலியர்கள் , !

 குறைகளைக் கொட்டித்தீர்த்த செவிலியர்கள்   , !

கிராம சுகாதார செவிலியர்கள் மீது எடுக்கப்படும் தற்காலிக பணி நீக்க நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், இதுவரை பிறப்பிக்கப்பட்ட பணி நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், இன்று பெருந்திரள் முறையீடு செய்வதற்காகச் சேலம், பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த செவிலியர்கள் டிஎம்எஸ் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

இன்று காலை முதலே டிஎம்எஸ் அலுவலகம் முன்பு சீருடையுடன் வந்த செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து முழக்கமிட்டனர். முக்கிய முழக்கமாக “பிரசவத்தின் போது தாய் இறந்துவிட்டால் அதற்கு நாங்கள் தான் காரணம் என்று கூறி எங்களை சஸ்பெண்ட் செய்கின்றனர். வீடு வீடாகச் சென்று ஓய்வின்றி சேவை செய்து வரும் எங்கள் மீது மேலும் பளுவைச் சுமத்துகின்றனர்” என்று குற்றம்சாட்டினர்.

“மகப்பேறு உதவித் தொகையை மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். நாங்கள் எப்படிக் கொடுக்க முடியும். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே அவர்களுக்கு எளிதில் உதவித் தொகை கிடைக்கும் வகையில் மகப்பேறு உதவித் திட்டத்தை எளிமைப்படுத்தித் தர வேண்டும். கணினிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் எளிமைப்படுத்தித் தரவேண்டும். ஊதிய முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி முறையீடு செய்தனர்.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற கர்ப்பிணிகளுக்குக் கருத்தடைச் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். கருத்தடை செய்ய வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட பெண் அவரது கணவன் அல்லது குடும்பத்தினர் எடுக்கும் முடிவு. இதில் நாங்கள் என்ன செய்வது. இதற்கும் எங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கின்றனர் என்று செவிலியர்கள் தங்களது குறைகளைக் கொட்டித் தீர்த்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கிராம சுகாதார சங்க செயல் தலைவர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், வீடியோ கான்பிரண்ஸிங் மூலம் தாய் சேய் இறப்பைப் பற்றி கேள்வி கேட்டு தன்னிலை விளக்கம் கூட கொடுக்க விடாமல் சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுக்கிறார். எனவே எங்கள் மீதான சஸ்பெண்ட் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் இன்று மதியம் சுகாதாரத் துறை இயக்குநர், சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் .. இதில் உடன்பாடு எட்டப்பட்டு, பணிநீக்கம் தொடர்பான நடவடிக்கை மூன்று வாரத்துக்குள் ரத்து செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செவிலியர்கள் டிஎம்எஸ் அலுவலகத்திலிருந்து கலைந்து சென்றனர்.

-கவிபிரியா

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon