மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவராக யாரும் பொறுப்பேற்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவராக யாரும் பொறுப்பேற்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவராக தேவி மாங்குடி பதவி ஏற்கலாம் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

2016ல் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் தான் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் குளறுபடிகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதில் சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரியதர்ஷினி மற்றும் தேவி மாங்குடி இருவரும் வெற்றி பெற்றதாகச் சான்றிதழ் வழங்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.

வாக்கு எண்ணிக்கை அன்று, நள்ளிரவில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தேவி மாங்குடி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனைப் பிப்ரவரி 6ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் முதலில் வெளியிட்ட அறிவிப்புதான் செல்லும் என்று கூறி தேவி மாங்குடியைப் பஞ்சாயத்துத் தலைவராக பொறுப்பேற்க உத்தரவிட்டது. அதேசமயம் பிரியதர்ஷினியின் வெற்றி செல்லாது என்று அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பிரியதர்ஷினி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்காக நேற்று பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் மற்றொரு வழக்கின் நீண்ட விசாரணை காரணமாக சங்கராபுரம் தேர்தல் தொடர்பான மனுவை விசாரிக்க முடியவில்லை.

இந்த மனு குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் சி.எஸ். வைத்தியநாதன் மற்றும் வழக்கறிஞர்கள் ஜெயந்த் முத்து ராஜ், வினோத் கண்ணா, ”பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஏற்பு விவகாரம் என்பதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி அமர்விடம் முறையிட்டனர்.

அதன்படி இன்று விசாரணைக்கு வந்தபோது, தேவி வெற்றி பெற்றதாகப் பிறப்பித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை ரத்து செய்தும், இந்த வழக்கு முடியும் வரை சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவராக யாரும் பொறுப்பேற்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon