மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

சொத்துக்குவிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்: ராஜேந்திர பாலாஜி

சொத்துக்குவிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்: ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013 வரை, தனது பதவியைப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் ஏழு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக அமைச்சர் சொத்து சேர்த்ததாகவும் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இவ்வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது. இதனிடையே வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1996இல் திருத்தங்கல் பேரூராட்சி தலைவராக இருந்தது முதல் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம், அமைச்சர் மீதான புகார் குறித்து நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர் மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதை ஏற்று இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை என்று அரசு முடிவு எடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டி இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த நிலையில் ஆரம்பக்கட்ட விசாரணையை எவ்வளவு நாட்கள் மேற்கொள்ளலாம் என்றும் யாரையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவாகப் பதிலளிக்க அமைச்சர் தரப்பு வழக்கறிஞருக்கும் தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜனுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கை வரும் மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-கவிபிரியா

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon