மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

காதலர் தினக் கொண்டாட்டத்தில் காவல்துறை!

காதலர் தினக் கொண்டாட்டத்தில் காவல்துறை!

உலகம் முழுவதும் இன்று(பிப்ரவரி 14) காதலர் தினம் அன்பும் காதலும் ததும்ப கொண்டாடப்பட்டு வருகிறது. புதிதாக காதலில் விழுந்தவர்கள், காதலால் இணைந்தவர்கள், காதலிக்க ஏங்கியவர்கள், மண வாழ்வில் மகிழ்வு கண்டவர்கள் என அனைவரும் இந்த தினத்தைத் தங்களுக்கான நாளாக தனித்துவத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அன்புப் பரிசுகளை அள்ளிக் கொடுத்தும், காதல் சம்மதத்தைக் கேட்டுப் பெற்றும் இந்த நாள் பலருக்கும் மறக்க முடியாத தருணங்களைத் தேடித் தருகிறது. மகிழ்ச்சிக்கான இந்த கொண்டாட்டத்தை வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழக காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர். ஏற்கனவே பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில் தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்ட காவல்துறையினர் நடிகர் அஜித்தின் திரைப்பட வசனங்களைப் பயன்படுத்தி மீம் கிரியேட் செய்து இணைய உலகில் கவனம் ஈர்த்தனர். இது தொடர்பாக பிப்ரவரி 12-ஆம் தேதி நமது மின்னம்பலம் தினசரியில், ‘பெண்களுக்காக’ அஜித்: காவல் துறையின் புது உத்தி! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதேபோன்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர், நடிகர் விஜய் நடித்த திரைப்பட வசனங்களைப் பயன்படுத்தி காவலன் செயலியை பிரபலப்படுத்தும் வகையிலான மீம்களை வெளியிட்டிருந்தனர். அவையும் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில் காதலர் தினக் கொண்டாடத்திலும் தங்கள் மீம்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறையினர் களமிறங்கியுள்ளனர்.

திருநெல்வேலி நகரத்தின் துணை போலீஸ் கமிஷனராகப் பதவி வகிக்கும் அர்ஜுன் சரவணன் அவர்கள், குறுந்தொகை செய்யுள்களுள் ஒன்றானதும், சகா திரைப்படத்தில் இடம்பெற்று அனைவரது இதயங்களைக் கொள்ளை கொண்டதுமான யாயும் ஞாயும் எனத்தொடங்கும் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு காதலர் தின வாழ்த்துக்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சில மீம்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

“காதல் கொள்ளுங்கள்

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைகவசத்தை!

காதல் கொள்ளுங்கள் வாகனத்தில் செல்லும்பொழுது வீட்டில் உள்ளவர்களை!” என்ற வார்த்தைகளுடன் காதலர் தின வாழ்த்துக்களை வித்தியாசமாகக் காவலர்கள் பகிர்ந்துள்ளனர்.

பொதுவாகவே 90's கிட்ஸ்களில் பெரும்பாலானவர்கள் ‘சிங்கிள் பசங்க’ளாகவே இருக்கிறார்கள் என்ற பேச்சு இணைய உலகின் முக்கிய கண்டென்டாகவே மாறியுள்ளது. அவர்களைக் குறிப்பிடும் விதமாகவும், அதே நேரத்தில் கவனிக்க வேண்டியதுமான செய்தியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

90s kids கவனத்திற்கு..

காதலர் தினத்தில்

சிங்கிளாய் பயணித்தாலும்

சீட் பெல்ட் அவசியம்.

பொறுப்பான ஆண்களுக்கே

பொருத்தம் பார்க்கும் நாள் வரும்.

இந்த ஆண்டு 20 20

எண்ணிலேயே பொருத்தம் உள்ள ஆண்டு. என்று நல்ல செய்தியுடன் நம்பிக்கையும் ஊட்டியுள்ளார்.

காதலர் தினத்தில் கவனம் ஈர்த்த காவலர்களுக்கு அனைவரும் நன்றிகளுடன் பாரட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon