மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

டிஜிட்டல் திண்ணை: இபிஎஸ்-ஓபிஎஸ்: பட்ஜெட் பனிப்போர்!

டிஜிட்டல் திண்ணை: இபிஎஸ்-ஓபிஎஸ்: பட்ஜெட் பனிப்போர்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

"தமிழ்நாடு பட்ஜெட் இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட் பற்றி கடந்த மாதம் முதலே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வந்தார்.

அமைச்சர்களை தலைமைச் செயலகத்தில் தனித்தனியாக அழைத்து பேசும்போதும் இந்த அரசு தாக்கல் செய்யப் போகும் கடைசி பட்ஜெட் என்பதால் இது தேர்தல் பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்று கூறி புதிய யோசனைகளையும் திட்டங்களையும் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த வகையில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக காவிரி டெல்டாவை அறிவிப்பது குறித்த ஆலோசனையும் நடந்திருக்கிறது. பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.

காவிரி டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பது மாநில அரசின் கையில் இல்லை மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்றும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசை வற்புறுத்த லாம் என முடிவெடுக்கப்பட்டதாக கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

அதேநேரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வட்டாரத்தில் நடத்திய தனிப்பட்ட ஆலோசனையில் இன்னொரு முக்கியமான விஷயம் பேசப்பட்டுள்ளது.

'ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்கு முன் தமிழக அரசை கலைப்பதற்கு மத்திய அரசு தயாராகிவிட்டது. சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போது அதிமுக அரசு பதவியில் இருப்பதை பாஜக விரும்பவில்லை. ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவந்து தேர்தல் நடத்தலாம் என்பது தான் அவர்களின் திட்டம். அதனால்தான் டெண்டர்களையும் முன்கூட்டிய வைத்து முடித்து வருகிறோம். இந்நிலையில் காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிப்பை பட்ஜெட்டில் பன்னீர் வெளியிடுவதை விட நீங்களே முதலில் வெளியிட்டு விடலாம்.

இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் அதை பட்ஜெட்டில் அறிவிக்காமல் நீங்களே பொது அறிவிப்பாக வெளியிட்டு விடுங்கள். பட்ஜெட்டில்

பன்னீர் அறிவித்து ஒருவேளை பாஜக அரசு ஏற்றுக்கொண்டால் வரலாற்றுப் புகழ் பன்னீருக்கும் பாஜகவும் போய்விடும். நீங்கள் பொது அறிவிப்பாக வெளியிட்டால் தான் நல்லது. ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எடப்பாடி வைத்த கோரிக்கையை நிராகரித்தது என பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடியும். எனவே தேர்தலுக்கு முன் அதிமுகவை பாஜக உடைத்தாலும் நாம் பாஜகவை எதிர்ப்பதற்கு இதெல்லாம் வலுவான காரணிகளாக இருக்கும்' என்று எடப்பாடியிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையிலேயே பட்ஜெட்டில் வெளியிட இருந்த காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிப்பை பட்ஜெட்டுக்கு முன்னதாகவே சேலத்தில் நடந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இவ்வாறு பட்ஜெட் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர்செல்வத்துக்கும் பாலிடிக்ஸ் பனிப்போர் நடைபெறுகிறது.

பட்ஜெட்டை தாண்டியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் சில அறிவிப்புகளை வெளியிடும் பட்சத்தில் இந்தப் பனிப்போர் வெளிப்படையாகவே தெரியவரும் என்கிறார்கள்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ்அஃப்.

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon