மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

இன்ஜினியரிங்க்கு கெமிஸ்ட்ரி கட்டாயமில்லை: ஏஐசிடிஇ!

இன்ஜினியரிங்க்கு கெமிஸ்ட்ரி கட்டாயமில்லை: ஏஐசிடிஇ!

இன்ஜினியரிங் படிப்பில் சேர பிளஸ் 2 வகுப்பில் கெமிஸ்ட்ரி பாடத்தை இனி கட்டாயமாக எடுத்துப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தெரிவித்துள்ளது.

தற்போது வரை பொறியியல் படிப்புகளில் சேர வேண்டுமானால் பிளஸ் 2 பாடத் திட்டத்தில் கணிதம். வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கட்டாயம் எடுத்துப் படித்திருக்க வேண்டும். மொத்த, கட்-ஆஃப் 200ஆக நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். இதில் கணிதத்தில் பெறும் மதிப்பெண்ணில் 50 சதவிகிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் பெறும் மதிப்பெண்களில் தலா 25 சதவிகிதம் என்ற அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.

அதன்படி இதுவரை இன்ஜினியரிங் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் என்றிருந்த நிலையில் தற்போது அது கட்டாயமில்லை என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இயற்பியல் மற்றும் கணிதம் பாடத்துடன் விருப்ப பாடமாக வேதியியல், பயோடெக்னாலஜி, உயிரியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, பொறியியல் கிராஃபிக்ஸ் மற்றும் வணிக ஆய்வுகள் ஆகியவற்றில் ஒன்றை எடுத்துப் படித்திருந்தால் போதுமானது என்று அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை 2020-21 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது ஏஐசிடிஇ.

ஏஐசிடிஇ அதிகாரி ஒருவர், “இந்த மாற்றங்களால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்விலும் இந்த மாற்றம் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கவிபிரியா

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon