மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிசிஐடிக்கு அழுத்தமா?

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிசிஐடிக்கு அழுத்தமா?

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார். இவ்வழக்கில் விசாரணை அதிகாரிக்குக் கொடுத்த அழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பே வந்துள்ளது என்றும் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு வேலைக்கு ஆள்சேர்ப்பு பணிகளைச் செய்து வரும் டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் வழக்கை சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் திமுக சார்பிலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் ஆகியோர் தலைமைச் செயலாளரைச் சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ஆர்.எஸ்.பாரதி, “தேர்வில் நடந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் தொலைபேசி வாயிலாகப் பேசியது எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நேர்மையாக விசாரித்து வரும் அதிகாரிகளில் ஒருவருக்கு மாரடைப்பே வந்துவிட்டது. அந்தளவுக்கு அரசாங்கத்திலிருந்து அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி பேப்பரெல்லாம் வேறொரு மாநிலத்தில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தலைமைச் செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேற்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார், திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு மீது குற்றம்சாட்டியுள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துள்ள அவர், ”யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும் புனிதமாகக் கருதப்பட்ட டிஎன்பிஎஸ்சியில் இந்த ஆட்சியில் முறைகேடு நடந்து வருகிறது. இதை அவ்வப்போது கண்டித்து நீதிமன்றத்துக்கும் சென்றிருக்கிறோம். முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்று கூறியுள்ளார்.

புதன், 12 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon