மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

போராட்டம்: சென்னையில் தொடரும் தடை!

போராட்டம்: சென்னையில் தொடரும் தடை!

சென்னையில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடையை தற்போது மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதுபோன்று சென்னை வண்ணாரப்பேட்டையிலும் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டது.ஆனால் போலீசார் இதற்கு அனுமதியளிக்கவில்லை. இதுமட்டுமின்றி சென்னையில் போராட்டம் நடத்தத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

முதலில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி வரை போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சிட்டி போலீஸ் சட்டம் 41ன் படி பேரணி, பொதுக்கூட்டம், மனிதச் சங்கிலி, போராட்டம் மற்றும் சாலைமறியல் போன்ற போராட்டங்கள் நடத்தப் பிப்ரவரி 12ஆம் தேதி வரை தடைவிதித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ” கல்யாண நிகழ்ச்சிகளில் கூடுவதற்குக் கூட காவல்துறையின் அனுமதி பெற வேண்டுமா” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் விதிக்கப்பட்ட தடையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து சென்னை காவல் ஆணையர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இன்று 8 மணி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த வேண்டுமெனில் 5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிபிரியா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon