மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி 13 ரூபாய்தான்!

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி 13 ரூபாய்தான்!

இன்றைய காலத்தில் வேலைப்பளு, பயணம் ஆகிய காரணங்களால் சரியான நேரத்துக்கு தண்ணீர் உட்கொள்கிறோமா என்றால் கேள்விக்குறிதான். இது ஒருபக்கம் என்றால் பயணத்தின் போது அதிக விலைக்கு விற்கப்படுவதால், ‘தண்ணீரை இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா’ என்றும் அதனைத் தவிர்க்கிறோம்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயணிகளுக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் 2013ல் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.10க்கு விற்பனை செய்யும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும் தமிழகத்தில் மோட்டல், உணவகங்கள் மற்றும் வெளி கடைகளில் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தண்ணீர் 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதிலும் தண்ணீர் கூலிங்காக இருக்க வேண்டுமானால் அதற்குத் தனி விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

நாடு முழுதும் பல இடங்களில் இதே நிலைதான். இந்நிலையை மாற்றி அனைத்து தரப்பு மக்களும் குறைந்த விலையில் குடிநீர் வாங்கக் கேரள அரசு கடந்த சில ஆண்டுகளாகத் தண்ணீர் பாட்டில்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வந்தது. முதலில் ரூ12க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டது. இதற்கு உற்பத்தி நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளவில்லை, இவ்வளவு விலையைக் குறைத்தால் நஷ்டம் ஏற்படும். இதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று எச்சரித்தது.

ஒரு சில நிறுவனங்கள் ரூ.15க்காவது விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. எனினும் அதற்குக் குறைவாகத் தான் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று அரசு தெரிவித்தது. இந்நிலையில் ஒரு வழியாக ரூ.13க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநிலத்தின் உணவுத் துறை அமைச்சர் திலோத்தமன், ”தேசிய அத்தியாவசிய சட்டத்தின் படி, இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நிர்ணயம் செய்யப்பட்ட விலையைத் தாண்டி இனி அதிக விலைக்குத் தண்ணீர் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதுதவிர கேரள அரசு தரப்பில் தமிழகம் போல் ரூ. 10க்கு தண்ணீர் விற்பனையாகிறது.

கேரள அரசின் முடிவு அம்மாநில மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயனுக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

-கவிபிரியா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon