மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

செருப்பு சர்ச்சை: டிஜிபிக்கு நோட்டீஸ்!

செருப்பு சர்ச்சை: டிஜிபிக்கு நோட்டீஸ்!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை அழைத்துச் செருப்பைக் கழற்றச் சொன்ன விவகாரம் தொடர்பாகப் பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலையில், பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க விழாவில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சிறுவனிடம் தனது செருப்பைக் கழற்றச் சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுவனையும் அவரது குடும்பத்தினரையும் அமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர் மீது மசினகுடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் திரும்பப் பெறப்பட்டது.

ஆளும் கட்சி தரப்பிலோ, திண்டுக்கல் சீனிவாசனுக்கு 70 வயதாகிறது. அவரால் குனியமுடியவில்லை என்பதால் சிறுவனை உதவிக்காக அழைத்தார் என்று கூறப்பட்டது. ஒரு வழியாக இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது என்று கருதப்பட்ட நிலையில் அமைச்சர் மீது பழங்குடியின நல ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த சமூக நீதிக் கட்சித் தலைவர் பன்னீர் செல்வம் இதுகுறித்து விசாரிக்கக் கோரி புகார் அளித்திருந்தார்.

இதனை விசாரித்த பழங்குடியின ஆணையம் சிறுவனை அழைத்துச் செருப்பைக் கழற்ற வைத்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பதிலளிக்கத் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

கவிபிரியா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon