மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

கஸ்டடியில் ஜெயக்குமாருக்கு சென்ற மெசேஜ்!

கஸ்டடியில் ஜெயக்குமாருக்கு சென்ற மெசேஜ்!

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தினம் தோறும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. குரூப் 4 முறைகேடு, குரூப் 2, விஏஓ என மூன்று தேர்வுகளிலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனித்தனியாக 3 வழக்குகளைப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இதில் குரூப் 4 முறைகேட்டில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குரூப் 2 தேர்வில் 19பேர் வரை கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் இருவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள பத்திரப் பதிவுத் துறை ஐஜி தலைமை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அனிதா, பூர்ணிமா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் குரூப் 2 தேர்வில் முறைகேடாக பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குரூப் 2 முறைகேட்டில் கைதாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே முக்கிய இடைத்தரகரான ஜெயக்குமாரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. ஜெயக்குமாரிடம் நடத்தப்படும் விசாரணையில் இந்த முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் கைதாவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. பணம் கொடுத்து தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கைதாகி வருகின்றனர்.

ஏற்கனவே, முக்கிய விஐபி ஒருவரின் உத்தரவின் பேரிலும் வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரிலும் தான் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து மின்னம்பலத்தில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு: விஐபி உத்தரவு - ஜெயக்குமார் சரண்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவரை 7 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்துவதால் அவருடன் ஜெயக்குமாரின் வழக்கறிஞரும் உடன் இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி ஜெயக்குமாரிடம் கேட்கப்படும் கேள்விக்கும் அவர் முறையாகப் பதில் அளிப்பதில்லை. 10 கேள்வி கேட்டால் ஒரு கேள்விக்குத்தான் பதில் சொல்வதாகவும் விசாரணை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயக்குமாரை பின்னால் இருந்து ஆப்ரேட் செய்பவர்கள், எதற்கும் அஞ்ச வேண்டாம், சிபிசிஐடி தொந்தரவு செய்யமாட்டார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வழக்கறிஞர் வந்து பார்ப்பார். ஒருவேளை சிபிசிஐடி எதாவது தொந்தரவு செய்தால் அதனை வழக்கறிஞரிடம் தெரிவிக்கலாம். எந்த பிரச்சினையும் வராது என்று சொல்லி தகவல் அனுப்பியிருப்பதாகவும் இதனால் அவரிடம் இருந்து உண்மையை வெளிவாங்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே ஜெயக்குமாரிடம் உள்ள மாருதி, பிஎம்டபிள்யு உள்ளிட்ட 5 சொகுசு கார்களையும் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தையும் பறிமுதல் செய்ய டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னம்பலம் டீம்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon