மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

நகர்ப்புற தேர்தல் தாமதம்: தேர்தல் ஆணையம் புதிய காரணம்!

நகர்ப்புற தேர்தல் தாமதம்: தேர்தல் ஆணையம் புதிய காரணம்!

இந்திய தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை என்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தாமதமாவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி பதவிகள் காலியாக இருந்து வந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததோடு பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து ஒரு வழியாகக் கிராமப்புற பகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது.

இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. மதுரையை சேர்ந்த ரமேஷ் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தேர்தல் ஆணையம் ஜனநாயக அடிப்படையில் செயல்படாமல் அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறது. கடந்த டிசம்பர் 9ஆம் தேதி ஊரக பகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஆனால் நகர்ப்புற பகுதிகளுக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் தான். எனவே நகர்ப்புற பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை உடனே வெளியிடத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று (பிப்ரவரி 13) நீதிபதிகள் துரைசாமி , ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில், இந்தியத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை இன்னும் தயார் செய்து கொடுக்கவில்லை. இதனால் நகர்ப்புற பகுதிகளுக்கான தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டுமெனத் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் கேட்கப்பட்டதால், 3 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

-கவிபிரியா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon