மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

உலக மொபைல் போன் கண்காட்சி: கொரோனா அச்சத்தால் ரத்து!

உலக மொபைல் போன் கண்காட்சி: கொரோனா அச்சத்தால் ரத்து!

உலகின் மிகப்பெரிய மொபைல் போன் கண்காட்சியான, மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress), கொரோனா வைரஸ் பயத்தின் காரணமாக இந்த வருடம் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி மொபைல் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த மெகா கண்காட்சியானது, இந்த வருடம் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறுவதாக இருந்தது. சுமார் ஒரு லட்சம் பேர் வரை இக்கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவிலிருந்து மட்டும் 6000 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் சோனி, சாம்சங் மற்றும் பல நிறுவனங்கள் தங்களின் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதாக இருந்தன.

பிப்ரவரி மாதம் 24-27 ஆம் தேதிகளில் நடத்தப்படுவதாக இருந்த கண்காட்சியில் கலந்துகொள்ள பல்வேறு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் இலா, எங்கள் நாட்டின் சுகாதாரத் துறையின் மீது நம்பிக்கை வையுங்கள் எனவும், அறிவியல் பூர்வமான தகவல்களை வைத்து முடிவெடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

எனினும், BT, நோக்கியா, அமேசான், சோனி, LG, எரிக்ஸன், ஃபேஸ்புக், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் இந்த வார துவக்கத்திலேயே கண்காட்சியில் கலந்துகொள்ள முடியாது என அறிவித்தன. இதுகுறித்து டோட்சே டெலிகாம், "பல வெளிநாட்டினர் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு எங்கள் ஊழியர்களை அனுப்புவது அவ்வளவு சரியாக இருக்காது" என தெரிவித்தது.

இந்நிலையில், "பார்சிலோனாவில் நடத்தப்பட இருந்த இந்த கண்காட்சி அனைவரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு நிறுத்தப்படுகிறது" என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த GSMA-வின் தலைமை நிர்வாகி ஜான் ஹாப்மேன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் காரணமாக நிகழ்ச்சியை நடத்த முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால் கண்காட்சி நிறுத்தப்படுகிறது எனவும், இது மிகப்பெரிய ஏமாற்றம் எனவும் கூறியுள்ளார்.

GSMA தனது கண்காட்சிகளை 2006ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. பார்சிலோனா கண்காட்சி நிறுத்தப்பட்டாலும், தொடர்ந்து ஷாங்காயில் ஜுன் மற்றும் ஜீலை மாதம் நடைபெற இருக்கும் கண்காட்சிக்காக அடுத்த கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

பவித்ரா குமரேசன்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon