மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

ஒப்பந்தம் போட்ட 18 மாதங்களில் டயர் தொழிற்சாலை!

ஒப்பந்தம் போட்ட 18 மாதங்களில் டயர் தொழிற்சாலை!

எடப்பாடி ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு தொழிற்சாலையாவது தொடங்கப்பட்டதுண்டா என்று மேடைதோறும் திமுகவினர் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கண்ணன்தாங்கல் கிராமத்தில், சியட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி ஆலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்ரவரி 12) தொடங்கி வைத்தார்.

தொழில் துறை அமைச்சர் சம்பத், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி, “இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 ஜூலை 5ஆம் தேதி என் முன்னிலையில் போடப்பட்டது. ஒப்பந்தம் போட்ட 18 மாதங்களில் உத்தரவாதம் அளித்த 4,000 கோடி ரூபாயில் 1,400 கோடி ரூபாயை முதலீடு செய்து, இன்று முழு அளவிலான வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளது சியட் நிறுவனம்.

வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையகமாக விளங்கும் தமிழ்நாடு, டயர் உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்துவகை பயன்பாட்டுக்கும் தமிழகத்தில் டயர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றால் அந்நிறுவனத்தின் சிறப்பான நிர்வாகத் திறனும், எங்கள் அரசு வழங்கிய ஒத்துழைப்புமே காரணம். சியட் தொழிற்சாலைக்கு ஒற்றை சாளர முறை மூலம் அனைத்து அனுமதிகளையும் விரைவாக வழங்க தமிழகத் தொழில் துறை அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. பெருந்தொழில் திட்டங்களை ஆய்வு செய்து அவற்றுக்கு அனுமதி வழங்கிட என் தலைமையில் ஓர் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 13-1-2020 அன்று நடந்த கூட்டத்தில் இந்த ஆலைத் திட்டத்தின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டு, ஆலையை இயக்குவதற்கான இசைவாணை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட இருக்கும் அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் எங்கள் அரசு முன்னிருந்து அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

-ராகவேந்திரா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon