மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

சிறப்புக் கட்டுரை: உள்ளதை உள்ளபடிச் சொல்கிறதா பொருளாதார ஆய்வறிக்கை?

சிறப்புக் கட்டுரை:  உள்ளதை உள்ளபடிச் சொல்கிறதா பொருளாதார ஆய்வறிக்கை?

நா. ரகுநாத்

ஒவ்வொரு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, அதாவது பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நடப்பாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். நடப்பாண்டில் பொருளாதாரத்தின் செயல்பாட்டைத் திறனாய்வு செய்து, உள்ளதை உள்ளபடிச் சொல்லும் பொறுப்பு, பொருளாதார ஆய்வறிக்கைக்கு உள்ளது.

நடுவணரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரின் அலுவலகத்தால் தயாரிக்கப்படும் அறிக்கை என்பதால், பொருளாதாரம் பற்றி அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை இந்த அறிக்கை பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தின் நிலை பற்றி இந்த அறிக்கை சொல்வதன் அடிப்படையில்தான் வரப்போகும் நிதியாண்டுக்கான பட்ஜெட் நிதியமைச்சகத்தால் தயாரிக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. உண்மையில் நடப்பது முற்றிலும் வேறாக இருந்தாலும், நம்புவதில் தவறொன்றும் இல்லையே!

சரி, பொருளாதார ஆய்வறிக்கை 2019-20 என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இரண்டு பகுதிகளைக் கொண்ட ஆய்வறிக்கையின் இரண்டாவது பகுதிதான் பொருளாதாரத்தின் செயல்பாட்டைப் பற்றிய பருந்துப் பார்வையை நமக்கு வழங்குகிறது. அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான பேசுபொருள்களில் சிலவற்றை மட்டும் இந்தக் கட்டுரையில் அலசுவோம்.

இந்தியப் பொருளாதாரம் வேகமிழந்ததற்கு உலகப் பொருளாதாரம்தான் காரணமா?

எடுத்த எடுப்பிலேயே ஆய்வறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா? கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக 2019ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் மிகக் குறைவான வேகத்தில் வளர்ந்ததாலும், பன்னாட்டு வர்த்தகச் சூழல் நிச்சயமற்ற ஒன்றாக இருப்பதாலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது இந்த அறிக்கை. அதாவது, உலகப் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவால் பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தையில் விற்க முடியவில்லை என்பது இதன் பொருள். உலகப் பொருளாதாரம் தொய்வடைந்துள்ளது உண்மைதான். இந்தியப் பொருளாதாரம் வேகமிழந்துள்ளதும் உண்மைதான். ஆனால், இவ்விரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதா?

இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் பொருட்கள் ஏற்றுமதியின் பங்கு வெறும் 11 விழுக்காடு. உலக ஏற்றுமதியில் இந்தியா செய்யும் ஏற்றுமதியின் பங்கு 2 விழுக்காட்டுக்கும் குறைவு. ஆக, உலக சந்தையில் விற்கப்படும் இந்தியப் பொருட்களின் அளவும் மதிப்பும் ஒப்பீட்டளவில் மிகவும் சொற்பம். இப்படி இருக்கையில், இந்தியப் பொருளாதாரம் வேகமிழந்ததற்கு உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தொய்வைக் காரணமாகச் சொல்வது சரியாக இருக்காது. உலகச் சந்தை என்பது பல நாடுகள் போட்டிபோடும் ஒரு களம். அதில் வெகு சிலரே வெற்றிபெற முடியும். அதனால், அதை நம்பித்தான் பொருளாதாரம் இயங்குகிறது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் உள்நாட்டுச் சந்தை அவ்வளவு பெரியது. நிச்சயமற்ற பன்னாட்டு வர்த்தகச் சூழல் இருப்பதால், இந்நாட்டு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்து, அவர்களுடைய வாங்கும் திறன்/சக்தியை (purchasing power) உயர்த்த வழிசெய்து, உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்துவது என்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

2017ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த மூன்றாண்டுகளில் உலகப் பொருளாதாரம் வேகமிழந்துள்ளதை ஒட்டியே இந்தியப் பொருளாதாரமும் சுணக்கம் கண்டுள்ளது என்றால், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் உலகப் பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்தபோது, இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்ததற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது பொருளாதார ஆய்வறிக்கை? பொருளாதாரம் வேகமாக வளரும்போதே போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை, அந்த வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்று சேர்வதில்லை. வளர்ச்சியின் வேகம் குறையும்போது அது பொருளாதாரப் படிநிலையில் அடித்தட்டுகளில் இருக்கும் மக்களின் வாழ்வில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

வேலையின்மைக்கும் நுகர்வுச் சரிவுக்கும் உள்ள தொடர்பு!

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18இல் நாட்டில் வேலையின்மை 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSSO) “Periodic Labour Force Survey 2017-18” எனும் அறிக்கை. ஜூலை 2017 - ஜூன் 2018 காலத்தில் நுகர்வோர் செலவீட்டு ஆய்வை (Consumer Expenditure Survey) NSSO நடத்தியது. இந்தியாவில் ஒரு தனிநபர், நுகர்வுக்காக ஒரு மாதத்தில் செய்யும் செலவு (Monthly per Capital Expenditure) 2011-12 - 2017-18 காலத்தில் 3.7 விழுக்காடு சரிந்துள்ளது; நகர்ப்புறங்களில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே வளர்ந்த இந்த நுகர்வுச் செலவு, ஊரகப் பகுதிகளில் 8.8 விழுக்காடு சரிந்துள்ளது என்பது தெரியவந்தது. கடந்த நாற்பதாண்டுகளில் நுகர்வுக்கான தனிநபர் செலவு இதுபோல் சரிந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உணவுக்காகச் செய்யும் செலவே குறைந்துள்ளது என்றால், நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மேலும், ஒட்டுமொத்த நுகர்வுச் செலவும் குறைந்துள்ளது என்பதால், நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கக் கூடும்.

அதிகரிக்கும் வேலையின்மை, நுகர்வுச் சரிவு மற்றும் வறுமைக்கு இடையே உள்ள நெருக்கமான தொடர்பை அங்கீகரிக்க மறுக்கிறது பொருளாதார ஆய்வறிக்கை.

வேலையின்மை, தொழிலாளர் நலன் பற்றி பேசாத ஆய்வறிக்கை!

2011-12 – 2017-18 காலத்தில் தினக்கூலி வாங்கும் சாதாரண முறைசாராத் தொழிலாளர்களின் (Casual Workers) பங்கு 30 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும், மாதாமாதம் சம்பளம் பெறும் Regular Wage/Salaried தொழிலாளர்களின் பங்கு 18 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் NSSOவின் அறிக்கை தெரிவிப்பதால், இந்தியப் பொருளாதாரத்தில் முறைசாராப் பொருளாதாரத்தின் (Informal Economy) பங்கு குறைந்து வருகிறது என்பது பொருளாதார ஆய்வறிக்கையின் புரிதல்.

ஒரு நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் எத்தனை பேர் வேலையில் இருக்கின்றனர் அல்லது வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை Labour Force Participation Rate (LFPR) என்பார்கள். 2011-12இல் கிட்டத்தட்ட 56 விழுக்காடாக இருந்த LFPR, 2017-18இல் 49.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி இவ்விரண்டின் விளைவாக இந்தியாவின் முறைசாராப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது; பெரியளவில் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதில் வேலை செய்து வந்தவர்கள், நம்பிக்கையிழந்து வேலை தேடுவதையே நிறுத்தியிருந்தாலும் முறைசாரா வேலைகளின் பங்கு குறைந்திருக்கக்கூடும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

மாதாமாதம் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களிலும், பெரும்பான்மையானவர்களுக்கு அவர்கள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கும் எழுதப்பட்ட ஒப்பந்தமோ (Written Job Contract), சமூகப் பாதுகாப்புப் பயன்களோ (Social Security Benefits) இல்லாத நிலையே நிலவுகிறது. பணிப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் மாத வருமானம் பெறுபவர்களின் பங்கு 2011-12 – 2017-18 காலத்தில் 64.7 விழுக்காட்டிலிருந்து 71.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இருக்கும் வேலைகளில் ஓரளவுக்கு நல்ல வருமானம், பாதுகாப்பை உறுதி செய்வதாகச் சொல்லப்படும் Regular Wage/Salaried வேலைகளும் நிரந்தரமான, சமூகப் பாதுகாப்பு வழங்கும் வேலைகளாக இல்லாதிருப்பது, நாட்டில் தொழிலாளர் நலன் குறித்து மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

இது ஒருபுறம் இருக்க, எந்தவொரு வேலையும் கிடைக்காமல், வேலை ஏதும் தேடாமல், உயர்கல்வியோ அல்லது தொழிற்பயிற்சியோ பெறாமல் இருக்கும் இளைஞர்களின் என்ணிக்கை 2011-12 – 2017-18 காலத்தில் மூன்று மடங்கு அதிகரித்து இருக்கிறது என்கிறார் பொருளாதார நிபுணர் ரத்தின் ராய். இவர், நாட்டின் தலைமை அமைச்சருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழுவில் சமீபகாலம் வரை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அசௌகர்யமான உண்மைகளைப் பொருளாதார ஆய்வறிக்கை விவாதிக்கவில்லை.

ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதித்துள்ள நிதித் துறை நெருக்கடி

2018-19 நிதியாண்டில் 6.8 விழுக்காடு வேகத்தில் வளர்ந்த இந்தியப் பொருளாதாரம், 2019-20 நிதியாண்டில் 5 விழுக்காடு வேகத்தில்தான் வளரும் என்று பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக்கொள்கிறது. இதற்கு உலகப் பொருளாதாரத்தை ஒருபுறம் காரணம் காட்டினாலும், மறுபுறம் உள்நாட்டில் நிலவும் சில முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியும் பேசுகிறது ஆய்வறிக்கை. குறிப்பாக, நிதித் துறையில் – வங்கிகள் + வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் – ஏற்பட்டிருக்கும் பெரும் நெருக்கடி, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.

2003-2008 காலத்தில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்ததால், இந்தியாவின் பெருமுதலாளிகள் சகட்டுமேனிக்கு பொதுத் துறை வங்கிகளிடம் மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் கடன் வாங்கினர். அந்தப் பணத்தை சாலைகள், நெடுஞ்சாலைகள், எரிசக்தி, மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் என உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் முதலீடு செய்தனர்.

ஆனால், 2009க்குப் பிறகு, வட்டி விகிதம் உயர்ந்ததாலும், அரசின் கொள்கை முடிவுகள் பலவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டதாலும், உலகப் பொருளாதாரச் சூழலில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட்டதாலும் பல திட்டங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர அரசின் அனுமதியும், வங்கியிலிருந்து கடனும் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பெருமுதலாளிகள் கடனைத் திருப்பித்தர முடியாத நிலைக்கு வந்தனர்; பொதுத் துறை, தனியார் வங்கிகளின் செயல்படாத சொத்துகளின் (NPA) பங்கு வேகமாக வளர்ந்தது. சிலர் வேண்டுமென்றே மோசடி செய்தது தனிக்கதை.

செயல்படாத சொத்துகளைச் செயல்படவைக்க வங்கிகள் முயற்சி செய்தபோதும், அவற்றில் பல சொத்துகள் வாராக்கடன் (Bad Debts) ஆகிவிட்டன. கடன் வாங்கிய நிறுவனங்களின் இருப்புநிலைக் கணக்கில் (Balance Sheet), திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவு அதிகரித்தது; கடன் கொடுத்த வங்கிகளின் இருப்புநிலைக் கணக்கில், திரும்பி வரவேண்டிய சொத்துகளின் அளவு அதிகரித்தது. முந்தைய தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த சுப்ரமணியன் தலைமையில் தயாரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2015-16 இதனை இரட்டை இருப்புநிலைக் கணக்கு நெருக்கடி (Twin Balance Sheet Problem) என்றழைத்தது.

சரியும் நிதிச்சேமிப்புகள், தேங்கும் தனியார் முதலீடுகள்

இவற்றின் விளைவாக, 2011-12 – 2017-18 காலத்தில், பொருளாதாரத்தில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளின் பங்கு, தேச மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் 11.5 விழுக்காடு என்ற நிலையிலேயே தேக்கம் கண்டுள்ளது. பதிவு செய்யப்படாத சிறு தொழில்கள் உற்பத்திக்காக செய்யும் முதலீடுகளும் இதே காலத்தில் 2.4 விழுக்காடு என்ற அளவிலேயே தேங்கியுள்ளன. ஆக, 2011-12 – 2017-18 காலத்தில் தனிநபர் நுகர்வு மற்றும் தனியார் முதலீடுகள் இரண்டுமே ஆட்டம் கண்டுள்ளதன் தொடர்ச்சியாகத்தான் 2019-20 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியின் வேகமிழப்பு தீவிரமடைந்துள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கவலையளிக்கும் மற்றொரு போக்கையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். குடும்பங்களின் சேமிப்பில் நகைகள், நிலம் மற்றும் மனைகளின் பங்கு, தேச மொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்துகொண்டே வருகிறது. அப்படியென்றால், குடும்பங்களின் நிதிச்சேமிப்புகளின் (Financial Savings) பங்கு அதிகரித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, குடும்பங்களின் நிகர நிதிச்சேமிப்புகளின் (Net Financial Savings) பங்கும் குறைந்துகொண்டே வந்துள்ளது. மொத்த நிதிச்சேமிப்புகளில் (Gross Financial Savings) இருந்து குடும்பங்கள் வாங்கும் கடனைக் கழித்தால் நிகர நிதிச்சேமிப்புகள் எவ்வளவு என்று தெரியும். 2011-12இல் 7.4 விழுக்காடாக இருந்த நிகர நிதிச்சேமிப்புகளின் பங்கு 2017-18இல் 6.6 விழுக்காடாகக் குறைந்தது.

மக்களின் வருமானம் குறைந்துள்ளதால், குடும்பங்கள் கடன் வாங்கி செலவு செய்து பொருட்கள் மற்றும் சேவைகளை நுகரும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதுதான் உண்மை நிலவரம் என்றால், கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வரும்போது, பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லையென்றால், மக்கள் நுகர்வைக் குறைத்துக்கொண்டுதான் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அப்படி நடக்குமானால் பொருளாதாரத்தின் நிலை மேலும் மோசமாகி விடும் அபாயம் இருக்கிறது.

கிராக்கி சுணக்கம் கண்டுள்ளதாலும், முதலீடுகள் தேக்கம் கண்டுள்ளதாலும் பொருளாதாரம் வேகமிழந்துள்ளது என்பதைப் பொருளாதார ஆய்வறிக்கை 2019-20 அங்கீகரிக்கிறது. கிராக்கியைத் தூக்கிவிடவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் பட்ஜெட்டின் அணுகுமுறை என்னவாக இருந்தது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பட்ஜெட் பற்றிய கட்டுரை நாளை காலை 7 மணி பதிப்பில் இடம்பெறும்

கட்டுரையாளர் குறிப்பு:

நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சியளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வெள்ளி, 7 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon