'கேம் ஓவர்’: சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு!

நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதியில் தினசரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தைக் கலைக்க பாஜக முயன்று வருகிறது. அதோடு பாஜக எம்.பி.க்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி ஷாஹீன் பாக் பகுதியில் துப்பாக்கி ஏந்தியவாறு புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை மிரட்டினார். இங்கிருந்து நகரவில்லை என்றால் கொலை விழும் என்று போராட்டக்காரர்களை அச்சுறுத்தினார். இதுதொடர்பாக டெல்லி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இன்று ஜாமியா பகுதியில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் துப்பாக்கி ஏந்தியவாறு மீண்டும் ஒருவர் புகுந்து அச்சுறுத்தியுள்ளார்.
பின்னர் திடீரென்று, ”சுதந்திரம் வேண்டுமா. வாங்கிக் கொள்” என்று கத்தியவாறு அங்கிருந்த மாணவர் ஒருவரை நோக்கிச் சுட்டுள்ளார். போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும் துப்பாக்கியுடன் புகுந்து அந்த நபர் அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது அந்த நபர் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியதாகவும் இதற்கு மாணவர்கள் வந்தேமாதரம் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மாணவரை துப்பாக்கியால் சுட்ட அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதில் அவரது பெயர் ராம்பக்த் கோபால் என்பது தெரியவந்துள்ளது.
ஜாமியா மாணவர்கள், ஜாமியா பகுதியிலிருந்து காந்தி நினைவிடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஹோலி குடும்ப மருத்துவமனை அருகே போலீசார் பேரிகார்டுகளை வைத்துத் தடுத்து நிறுத்தினர். அப்போது துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர் எனது நண்பனை நோக்கிச் சுட்டார் என்று பல்கலையில் பொருளாதாரம் படித்து வரும் ஆம்னா ஆசிஃப் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஷதாப் என்ற மாணவர் முதலில் ஹோலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர், ராம்பக்த் கோபால், தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். போராட்டக் களத்துக்குள் செல்வது போன்று அந்த வீடியோக்கள் உள்ளது. அதற்கும் இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக “ஷாஹீன் பாக் விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். மேலும், அடுத்தடுத்த பதிவுகளில் சந்தன் பாய் இந்த பழிவாங்குதல் உங்களுக்காக என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#WATCH A man brandishes gun in Jamia area of Delhi, culprit has been detained by police. More details awaited. pic.twitter.com/rAeLl6iLd4
— ANI (@ANI) January 30, 2020