மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

தமிழகத்தின் வியாபம் டிஎன்பிஎஸ்சி: தயாநிதி ஜெயக்குமார் மோதல்!

தமிழகத்தின் வியாபம் டிஎன்பிஎஸ்சி: தயாநிதி ஜெயக்குமார் மோதல்!

குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்குத் தொடர்பு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் நாளுக்கு நாள் பலர் கைதாகி வருகின்றனர். இதன் மூலம் அரசு அதிகாரிகள் உட்படப் பெரிய நெட்வொர்க் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் 9300 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற முக்கிய கேள்வி எழுந்தது. மேலும் இன்று காலை டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான அடுத்தகட்ட பணிகளை நிறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, 9,300 காலிப்பணியிடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். கலந்தாய்வு பணிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கி விட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என்று கூறியுள்ளது. இதன்மூலம் தேர்வு ரத்து செய்யப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், குரூப் 4 முறைகேட்டில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக திமுக எம்.பி.தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரனின் தொகுதி அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டை உலுக்கிய மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழலை போன்று, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு பெரிய அளவில் நடைபெற்று தமிழகத்தை உலுக்கி வருகிறது. இதில் அமைச்சர் ஜெயக்குமாருக்குத் தொடர்பு இருக்கிறது. அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது. காலம் கடத்தாமல் உடனடியாக சிபிஐக்கு வழக்கை மாற்றினால் உண்மை வெளியே வரும் என்று தெரிவித்துள்ளார். இந்த அரசு அடிமை அரசு. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை. ஆனால் புது கல்விக் கொள்கை வருவதற்கு முன்பே இங்குத் தேர்வு நடத்தப்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தார்.

தயாநிதி மாறன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், என் மீது இப்படி குற்றம் சாட்டுபவர்கள் தங்கள் யோக்கியதை என்ன என்று பார்க்க வேண்டும். 2ஜி ஊழல் உலகம் அறிந்த ஒன்று. அதுபோன்று பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் விரைவில் சிறைக்குச் செல்லவுள்ள அவர் என் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர்வேன் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 30 ஜன 2020