மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

கல்யாணத்துக்கும் காவல்துறை அனுமதி வேண்டுமா? -உயர் நீதிமன்றம்!

கல்யாணத்துக்கும் காவல்துறை அனுமதி வேண்டுமா? -உயர் நீதிமன்றம்!

கல்யாண நிகழ்ச்சிகளில் கூடுவதற்குக் கூட காவல்துறையின் அனுமதி பெற வேண்டுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி 6 மணி வரை சென்னையில் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் உட்பட எந்த இடங்களிலும் தமிழ்நாடு சிட்டி போலிஸ் சட்டம் 41ன்படி பேரணி, பொதுக்கூட்டம், மனிதச் சங்கிலி, போராட்டம் மற்றும் சாலைமறியல் போன்ற போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஆணை ஜனவரி 28 ஆம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

போராட்டம் நடத்தியே ஆகவேண்டும் என்றால் போராட்டம் நடத்துவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக காவல்துறையிடம் அனுமதிக் கடிதம் வழங்கவேண்டும், காவல்துறையினர் அனுமதி அளித்தால் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை காவல்துறையின் இந்த உத்தரவை எதிர்த்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்தவும் காயத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (ஜனவரி 30) நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

“மக்களுக்குத் தெரியாமலேயே இதுபோன்ற உத்தரவுகளை நீட்டித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது கருத்துரிமை, போராட்ட உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருக்கிறது. எனவே போராட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது.

அப்போது காவல்துறை ஆணையர் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், “சட்டம் ஒழுங்கு காரணத்துக்காகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது சென்னை மாநகரில் உள்ள காவல் நிலைய தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டிருக்கிறது” என்று பதிலளித்தார்.

அப்போது நீதிபதி, “சென்னை மாநகரம் முழுதும் பொருந்தக் கூடிய இந்த உத்தரவை ஏன் மக்களுக்குத் தெரியப்படுத்தவில்லை? இது ஜனநாயக நாடு. இங்கே கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கூடுவதற்குக் கூட காவல்துறையின் அனுமதி வேண்டுமா? ஒரு வேளை அனுமதி பெறாமல் கூடினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? இந்த உத்தரவை மக்களிடம் இருந்து மறைப்பது ஏன்? மக்களிடம் கொண்டு செல்ல என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? உயர் நீதிமன்ற உத்தரவுகள் இணைய தளங்களில் வெளியிடப்படுவதை போல, காவல் ஆணையர் அலுவலக உத்தரவுகளை ஏன் இணைய தளங்களில் வெளியிடக் கூடாது?” என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு, “காவல் ஆணையரின் உத்தரவை மக்களிடம் தெரிவிப்பது பற்றி பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்” என்று அரசு வழக்கறிஞர் கோரினார்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 30 ஜன 2020