மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 ஜன 2020

குரூப் 4 முறைகேடு: நீளும் கைது பட்டியல்!

குரூப் 4 முறைகேடு: நீளும் கைது பட்டியல்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களை குரூப் 4 முறைகேடு அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் நிலையில் இந்த வழக்கில் தொடர்ந்து பலர் கைதாகி வருகின்றனர். கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதில் தொடர்புடையவர்கள் விழுப்புரம், சென்னை எனப் பல்வேறு இடங்களில் கைதாகி வருகின்றனர்.

கைதாகும் நபர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தேர்வர்கள், இடைத்தரகர்கள் என அடுத்தடுத்து கைது பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. ஏற்கெனவே இந்த வழக்கில் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட திருக்குமரன். ரமேஷ், நிதிஷ்குமார் மற்றும் வட்டாட்சியர்கள் வீரராஜ், பார்த்தசாரதி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று பண்ருட்டி ராஜசேகர், திருநெல்வேலி ஐயப்பன் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.

இந்தச் சூழலில் நேற்று மாலை மேலும் சிலரை கைது செய்திருப்பதாக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்களாகச் செயல்பட்டு முறைகேடாகத் தேர்வு எழுதப் பணம் பெற்ற ஆவடியைச் சேர்ந்த வெங்கட்ராமன், தேர்வர்கள் ராமநாதபுரம் கோடனூர் பகுதியைச் சேர்ந்த திருவேல்முருகன், ஆவடியைச் சேர்ந்த காலேஷா ஆகியோரை கைது செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சிபிசிஐடி தெரிவித்தபடி முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக சிபிசிஐடி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு தொடர்பான முறைகேடுகள் குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது எனத் தகவல் வெளியானது. வேலூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 130க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த புகார் குறித்து விளக்கமளித்துள்ள சீருடை பணியாளர் தேர்வாணையம், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு மட்டுமே நிறைவு பெற்றுள்ளதாகவும் உடற்தகுதித் தேர்வு இனிதான் நடைபெறவுள்ளதாகவும் அனைத்து தேர்வும் முடிந்த பின்னரே முறைகேடு நடந்ததா என்பது குறித்துக் கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

2 நிமிட வாசிப்பு

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

ஞாயிறு 26 ஜன 2020