tசுகோய் 30 MKI போர் விமானம்: சிறப்பு பெற்ற தஞ்சை!

public

இந்தியா தனது பாதுகாப்பைப் பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தென்னிந்தியாவின் தஞ்சையில் உள்ள விமானப் படைத்தளத்தில் சுகோய் 30 MKI ரக விமானம் நேற்று சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தென்பகுதியைப் பொறுத்தவரை சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் தஞ்சை படைத்தளத்தில் சுகோய் 30 MKI ரக விமானம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் விதமாக, இந்த ரக போர் விமானம் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வகை போர் விமானம் உள்ள தென்னிந்தியாவின் முதல் படைத்தளம் என்ற பெருமையைத் தஞ்சை பெற்றுள்ளது.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற போர் விமானங்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆர்.கே.பதோரியா, தஞ்சை விமானப் படை அதிகாரி பிரஜோல்சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் புதிதாக இணைக்கப்பட்ட சுகோய் 30 MKI ரக போர் விமானம் வானில் வட்டமிட்டன.

இந்திய விமானப்படையில் உள்ள அதிநவீன போர் விமானம் சுகோய் 30 MKI ஆகும். இந்த விமானமானது வானில் பறந்துகொண்டே, எதிரில் வரும் இலக்குகளைத் தாக்குவதுடன், தரையில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் வல்லமை பெற்றது. ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் HAL (Hindustan Aeronautics Limited) நிறுவனம் தயாரித்து இந்தப் போர் விமானத்தை வழங்குகிறது..

2002ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த விமானம் விமானப்படையில் இணைக்கப்பட்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2120 கிமீ மற்றும் இதனுடைய எடை 38,000 கிலோவாகும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 1500 கிமீ வரை பயணம் செய்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடியது சுகோய் 30 MKI.

தற்போது தஞ்சையில் 8 சுகோய் அதிநவீன போர் விமானம் கொண்ட படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் 6 சுகோய் விமானம் மட்டுமே வந்துள்ளன. இன்னும் சில நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட சுகோய் 30 MKI போர் விமானம் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் இங்கு அணிவகுக்கவுள்ளது. இந்தப் படைப் பிரிவுக்கு டைகர் சார்க்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தஞ்சையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விமானப் படைத்தளம் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

1940ஆம் ஆண்டு தஞ்சையில் புதுக்கோட்டைச் சாலையில் இந்த விமானப் படைத்தளம் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் மிகவும் முக்கிய பங்கு வகித்தது இந்த விமானப் படைத்தளம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எந்தவித பராமரிப்பும் இன்றி காணப்பட்டது. பிறகு 2013ஆம் ஆண்டு பராமரிக்கப்பட்டது. இந்த படைத்தளத்தில் சுகோய் விமானங்களை அணிவகுக்கச் செய்ய ஆறு வருடங்களாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று அனைத்து விதத்திலும் புதுப்பொலிவு பெற்று சுகோய் விமானங்கள் தஞ்சை விமானப் படைத்தளத்தில் அணிவகுத்தன. தஞ்சாவூர் விமானப் படைத்தளம் என்பது இரண்டு நீளமான ஓடுதளங்களாக 5,680 நீளமும், 4,757 நீளமும் கொண்டதாகும்.

இந்த நிகழ்ச்சி குறித்து முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கூறுகையில், “தெற்கு தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தஞ்சை மிகவும் முக்கியமான படைத்தளம் என்பதால் சுகோய் போர் விமானம் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. தஞ்சையில் சுகோய் போர் விமானப் படைப் பிரிவை அமைப்பதன் மூலம் இந்தியக் கடற்படை மற்றும் ராணுவப் படைக்கு முழுமையான ஆதரவு வழங்க முடியும்” என்று கூறியுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *