மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

திலீப்பின் முறையீடுகள்: மீண்டும் மீண்டும் நிராகரிப்பு!

திலீப்பின் முறையீடுகள்: மீண்டும் மீண்டும் நிராகரிப்பு!

நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய வழக்கில் கைதாகி, தற்போது ஜாமீனில் இருக்கிறார் நடிகர் திலீப். இந்த வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்கவேண்டும் என்ற திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம்.

முன்விரோதம் காரணமாக நடிகையைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் நடிகர் திலீப். குற்றத்தில் ஈடுபட்டவர்கள், அந்த சம்பவத்தை வீடியோ எடுத்தபோது நடிகர் திலீப் இதில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து பேசிய ஆதாரம் இந்த வழக்கில் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த ஆதாரத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், அதனை அரசு சாரா தனியார் நிறுவனங்களின் மூலம் அதிதொழில்நுட்பம் வாய்ந்த முறையில் பரிசோதனை செய்யவேண்டும் என திலீப் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின்படி, Central Forensic Laboratory(CFSL) என்ற இடத்தில் அந்த வீடியோ ஆதாரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திலீப் மற்றும் இதர குற்றவாளிகளின் குறுக்கு விசாரணை கொச்சியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற இருப்பதால், CFSL அறிக்கை வரும்வரை விசாரணையை நிறுத்திவைக்கவேண்டும் என திலீப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. A.M.கன்வில்கர் இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.

திலீப் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி “CFSL அறிக்கை வந்தபிறகு தான் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யமுடியும். எனவே, அதுவரையில் இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கவேண்டும். குற்றம் செய்யாத என் கட்சிக்காரருக்கு சாதகமாகவே அறிக்கை வரும் என்பதால், அதன்பிறகு இந்த வழக்கே இருக்காது. ஆனால், அதற்கு முன்பு விசாரணையைத் தொடர்ந்தால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு என் கட்சிக்காரர் ஆளாக நேரிடும்” என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் “ஏற்கனவே, கேரள உயர் நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்பட்டே இந்த வழக்கில் திலீப் குற்றவாளி என சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு 85 நாட்களை கழித்துவிட்டு, இப்போது ஆதாரங்களின் மீது சந்தேகத்தை உருவாக்கி வழக்கின் வேகத்தை தடை செய்கின்றனர். விசாரணையை தாமதப்படுத்துவது குற்றவாளிகள் தப்பிக்க வழிகொடுக்கும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதியரசர் திரு. A.M.கன்வில்கர், “இரு தரப்பு வாதங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன. மனுதாரர் தரப்பில் சொல்லப்படுவதுபோல, CFSL அறிக்கையில் இருப்பதைப் பொறுத்து இந்த வழக்கு மாறுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. அதேசமயம் அரசு தரப்பில் குறிப்பிடுவது போல, விசாரணையை தாமதப்படுத்துவது குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கலாம். ஆனால், இதில் திலீப் மட்டுமே குற்றவாளி இல்லை என்பதால், அவரைத் தவிர்த்து மற்ற குற்றவாளிகளின் குறுக்கு விசாரணையை கொச்சி சிறப்பு நீதிமன்றம் தொடரலாம். CFSL அறிக்கை வந்தபிறகு, அதனை அடிப்படையாக வைத்து திலீப்பிடம் விசாரணை நடத்துவது ஏதுவாக இருக்கும்” என்று உத்தரவிட்டார்.

பரிசோதனையில் இருக்கும் மெமரி கார்டில் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்தபோது, திலீப்புக்கு வீடியோ கால் செய்து அங்கு நடைபெறுவதை நேரலையில் காட்டிய வீடியோ இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சனி, 18 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon