மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

அலங்காநல்லூரிலும் கெத்து காட்டிய ராவணன்

அலங்காநல்லூரிலும் கெத்து காட்டிய ராவணன்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களைக் கலங்கடித்த ‘ராவணன்’ என்னும் காளை அலங்காநல்லூரிலும் வீரர்களை அலற விட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு வீரவிளையாட்டுகளும் பல பகுதிகளிலும் நடைபெற்றுவருகிறது. தமிழர்களின் பண்பாட்டையும் வீரத்தையும் பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற போட்டிகளும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதிலும் மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளைக் காண வெளிநாட்டினர் உட்பட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று( ஜனவரி 17) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு துவங்கியுள்ளது. இந்தப்போட்டிகளைக் கண்டுகளிக்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியுள்ளனர்.

முன்னதாக அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதா என்பவரது காளை யார் கையிலும் சிக்காமல் அனைவரையும் கவர்ந்தது. தன்னை அடக்க வந்த வீரர்களுக்கு நேராக சீறிப்பாய்ந்த ராவணனைக் கண்டு வீரர்கள் பயத்தில் அலறினர். ராவணனைக் கண்டு பயந்த மாடுபிடி வீரர்கள் பயத்தில் தடுப்புச் சுவர்களுக்கு மேலே ஏறித் தொங்கினர்.கொம்பு வச்ச சிங்கமாக அங்கு கெத்துகாட்டிய ராவணன் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் ராவணன் தனது வீரத்தைக் காட்டியுள்ளது. சீறி பாய்ந்து வீரர்களை முட்டி வீழ்த்தி, யார் கையிலும் சிக்காமல் ராவணன் கெத்துக்காட்டியது. இதன் மூலமாக அலங்காநல்லூரிலும் ராவணன் சிறந்த காளையாகப் பரிசுகளை அள்ளிச்செல்லுமா என்பதை அறிய அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon