மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

நிர்பயா குற்றவாளிகள்: கருணை மனு நிராகரிப்பு!

நிர்பயா குற்றவாளிகள்: கருணை மனு நிராகரிப்பு!

நிர்பயா வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான, முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டார்.

2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நிர்பயா வழக்கில் குற்றவாளிகளென அறிவிக்கப்பட்ட முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்‌ஷய் தாக்கூர் மற்றும் பவன் குப்தா ஆகியோரில் முகேஷ் சிங் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டது.

கருணை மனுவினை ஜனாதிபதிக்கு அனுப்பிய உள்துறை அமைச்சகம், ‘இதனை நிராகரிக்க பரிந்துரைக்கிறோம்’ என்றும் குறிப்பிட்டு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை, முகேஷ் சிங்கின் கருணை மனுவினையும், உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி, முகேஷ் சிங்கின் கருணை மனுவினை நிராகரிப்பதாக அறிவித்திருக்கிறார்.

குற்றவாளியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியின் கண்ணீர் நின்றபாடில்லை. “அரசியல் ஆதாயத்துக்காக, என் மகளின் மரணத்தைப் பயன்படுத்தி அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள்” என்று ANI நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் ஆஷா தேவி. மேலும் பேசியபோது “2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்கள் பாதுகாப்பினை அடிப்படையாக வைத்து பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஜனவரி 22ஆம் தேதிக்குள் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டபடி குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

“2012இல் என் மகளின் மரணத்துக்காக வீதிக்கு வந்து யாரெல்லாம் போராடினார்களோ, அவர்களே இப்போது அரசியல் ஆதாயத்துக்காக என் மகளின் மரணத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்று கண்ணீர் மல்க பேட்டியளித்திருக்கிறார்.

குற்றவாளிகளை தூக்கிலிடாததற்கு காரணமாக டெல்லியில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சியை  மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோத்யா “டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இரண்டு நாட்கள் போலீஸை மாநில அரசின் கட்டுப்பாட்டில் விடுங்கள். அதற்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிக் காட்டுகிறோம்” என்று சவால் விட்டிருக்கிறார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக  அறிவிக்கப்பட்டிருக்கும் நால்வரும், ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணியளவில் தூக்கிலிடப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon