மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஜமைக்காவில் நித்தி

  ஜமைக்காவில் நித்தி

குஜராத் உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மீது இருக்கும் குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கில், புகார்தாரர் ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் ஜனவரி 16 ஆம் தேதி மேலும் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அதில் அவர்கள், “நாங்கள் இப்போது ஜமைக்காவில் இருக்கிறோம். நாங்கள் நித்யானந்தாவால் எந்த அழுத்தத்துக்கும் ஆளாகவில்லை. நாங்கள் இந்தியாவுக்கு வர விரும்பவில்லை. எங்கள் தந்தை ஜனார்த்தன சர்மா இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். அவரது தொடர்பால் எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் அங்கே வந்தால் எங்கள் தந்தையால்தான் எங்களுக்கு ஆபத்து” என்று சொல்லியிருக்கிறார்கள்.

மேலும், “ஜனார்த்தன சர்மா நித்யானந்த ஆசிரமத்தில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அதை மறைக்கும் விதமாகவே இப்படி புகார்களைக் கிளப்புகிறார். நவம்பர் 2018 இல் தனது சொந்த விருப்பப்படி நாட்டை விட்டு வெளியேறினோம். குடும்பத்துடன் மீண்டும் இணைய விரும்பவில்லை” என்றும் அந்த அபிடவிட்டில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த பிரமாணப் பத்திரத்தை ஏற்கக் கூடாது அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டுமென்று ஜனார்தன சர்மா கோரிக்கை வைத்தார். நீதிமன்றமோ அந்த பிரமாணப் பத்திரத்தில் ஜமைக்காவில் இருக்கும் இந்திய தூதரகம் சான்றொப்பம் இட்டிருப்பதை சுட்டிக் காட்டி ஏற்றுக் கொண்டது.

இருப்பினும், சர்மா தனது மகள்கள் இருவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஆசிரம அழுத்தத்தால் பேசுகிறார்கள் என்று கூறினார் சர்மா. ஜனவரி 24 ம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம் அன்று சர்மாவின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் நித்யானந்தாவை பிடிப்பதற்கான உத்தரவுகளை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நித்யானந்தாவின் வசம் இருக்கும் இரு பெண் சீடர்களின் பிரமாணப் பத்திரத்துக்கு ஜமைக்காவில் இருக்கும் இந்திய தூதரகமே சான்றொப்பம் கொடுத்திருக்கிறது என்றால், மத்திய அரசு நித்யானந்தாவை எப்படி அணுகுகிறது என்று புரியவில்லை என்கிறார்கள் ஜனார்தன சர்மா தரப்பினர்.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon