மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

டெல்டாவில் இன்னொரு ஹைட்ரோகார்பன் திட்டம்: பொங்கல் பரிசு!

 டெல்டாவில் இன்னொரு ஹைட்ரோகார்பன்  திட்டம்: பொங்கல் பரிசு!

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே நான்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கும் தகவல் டெல்டா மக்களை மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்கும் நோக்குடன் உள்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 4 முறை ஏலங்கள் நடத்தப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக மார்ச் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,789 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான உரிமங்கள் இந்த 5வது ஏலத்தில் வழங்கப்படவுள்ளன. இவற்றில் 4,064.22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்படவிருக்கிறது.

இதுகுறித்து இன்று ( ஜனவரி 17) வெளியிட்டுள்ள அறிக்கையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் தொடக்கமும் முடிவும் புதுச்சேரியைச் சேர்ந்தவை என்றாலும், இடைப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும். அதுமட்டுமின்றி, இந்தப் பகுதிகள் தான் மீன் வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஏற்கெனவே காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் போதிய மீன்வளம் இல்லாததால், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அந்நாட்டு ராணுவத்தால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது. புதிய ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அது செயல்படுத்தப்படும் பகுதி மீனவர்களும் இடம்பெயர வேண்டிய அவலநிலை ஏற்படும்.

ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதால், அதையொட்டியுள்ள நிலப்பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. மேலும் இந்த திட்டத்தின்மூலம் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கொண்டுவர விளைநிலங்களில் குழாய்கள் புதைக்கப்படும் என்பதால், அது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

மேலும் அவர், “ தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் இதுவரை வேதாந்தா நிறுவனத்திற்கு இரு உரிமங்களும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஓர் உரிமமும் அளிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் பகுதியில் 471.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நான்காவது உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ள பரப்பளவு சுமார் 3,200 சதுர கிலோமீட்டர் . ஆனால், இப்போது 5வது உரிமம் வழங்கப்பட உள்ள நிலப்பரப்பு 4,064 சதுர கிலோமீட்டர். அதாவது, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மொத்த பரப்பளவைவிட, 5வது திட்டத்தின் பரப்பளவு மிகவும் அதிகம் ஆகும். அதேபோல், நாடு மு-ழுவதும் 5வது ஏலம் மூலம் ஹைட்ரோ கார்பன் உரிமம் வழங்கப்பட உள்ள பரப்பளவில் 20 விழுக்காட்டிற்கும் கூடுதலான பரப்பு காவிரி டெல்டாவில் தான் அமைந்திருக்கிறது. காவிரி டெல்டாவை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற மத்திய அரசு முயல்வதையே இது காட்டுகிறது.

ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் காரணமாக, காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறிவிடும் ஆபத்து இருப்பதை ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். தமிழ்நாட்டில் 3 போகம் விளையும் காவிரிப் பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாமல், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து உரிமம் வழங்குவது முறையல்ல. எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 5வது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு உரிமம் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை அரசு ரத்து செய்யவேண்டும்” என்று கோரிக்கை முன் வைத்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon