மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

நிர்பயா வழக்கு: தூக்குத்தண்டனை தேதியில் மாற்றம்!

நிர்பயா வழக்கு:  தூக்குத்தண்டனை தேதியில் மாற்றம்!

நிர்பயா கொலைவழக்கின் குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ஆம் தேதி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட நிர்பயாவை அத்தனை எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்து ஏழு வருடங்களுக்கும் மேல் ஆகின்ற நிலையில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க நிர்பயாவின் பெற்றோர் தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, ஆகாஷ் குமார் சிங், பவன் குப்தா ஆகிய நான்கு பேரின் தூக்கு தண்டனையை ஜனவரி 22-ஆம் தேதி காலை ஏழுமணிக்கு நிறைவேற்றும்படி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நிர்பயாவின் பெற்றோர் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர்.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இன்னும் ஆறு நாட்களே இருக்கும் நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி துணைநிலை ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுநர் நிராகரித்துவிட்டார். எனினும் இந்தக் கருணை மனு மீது மத்திய உள்துறை அமைச்சகம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜனவரி 22-ஆம் தேதியில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படாது என்று இடைக்கால தடைவிதித்து டெல்லி நீதிமன்றம் நேற்று(ஜனவரி 16) உத்தரவிட்டது.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக குற்றவாளிகள் திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த இடைக்காலத்தடை உத்தரவு அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள கருணை மனு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது அவர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை நாளை(ஜனவரி 17) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கருணை மனு நிலுவையில் உள்ள காரணத்தால் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்கும்படி திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon