மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

காந்திக்கு பாரத் ரத்னா: மறுத்த உச்ச நீதிமன்றம்!

காந்திக்கு பாரத் ரத்னா: மறுத்த உச்ச நீதிமன்றம்!

மகாத்மா காந்திக்கு நாட்டின் உயர்ந்தபட்ச விருதான பாரத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று அனில் தத்தா ஷர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று (ஜனவரி 17) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “ மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை ஆவார். மக்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள். காந்தியின் மீது இந்த நாடு வைத்திருக்கும் மதிப்பு எந்தவொரு முறையான அங்கீகாரத்திற்கும் அப்பாற்பட்டது. எனவே காந்திக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது” என்று கூறியிருக்கிறது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச், “இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறது. வேண்டுமென்றால் மனுதாரர், அரசாங்கத்திடம் முறையீடு செய்யலாம்” என்று கேட்டுக் கொண்டது.

"மனுதாரரின் உணர்வோடு நாங்கள் உடன்படுகிறோம், ஆனால் இந்த மனுவை நாங்கள் ஏற்க முடியாது. நீங்கள் அரசாங்கத்திற்கு ஒரு பிரதிநிதித்துவம் செய்யலாம். காந்தி பாரத் ரத்னாவை விட மிக உயர்ந்தவர். அவர் மக்களால் மிகவும் மதிக்கப்படுகிறார். மகாத்மா காந்தியின் முன் பாரத ரத்னா என்றால் என்ன?" என்று தலைமை நீதிபதி போப்டே குறிப்பிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில், “அப்படியென்றால் பாரத் ரத்னாவை விட சிறந்தவர் என்று காந்தியை மரியாதை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்” என்று கேட்க, “இதுபற்றி அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

அண்மையில் மகாராஷ்டிர பாஜக தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசை வற்புறுத்துவோம் என்று அறிவித்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளார் டி.ராஜா, “இன்னும் சில காலங்களில் காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு பாரத் ரத்னா விருது கேட்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை” என்று கூறியது இங்கே நினைவுகூறத் தக்கது.

வெள்ளி, 17 ஜன 2020

அடுத்ததுchevronRight icon