மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: பரிசுகளை வென்ற காளைகளும் காளையரும்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: பரிசுகளை வென்ற காளைகளும் காளையரும்!

அலங்காநல்லூரில் நடைபெற்ற, உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவுக்கு வந்தது. போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், காளைகளுக்கும் சிறப்புப்பரிசுகளும் வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அவற்றில் குறிப்பிடும் விதமாக, மதுரை மாவட்டத்தின் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காணும் பொங்கல் தினமான இன்று(ஜனவரி 17) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் மிக விமரிசையாக நடந்து முடிந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவின் கண்காணிப்பில் இந்தப்போட்டிகள் நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் விஜயபாஸ்கர், தேனீ நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் முன் நின்று இந்தப்போட்டிகளைக் கண்டுகளித்தனர்.

இந்தப்போட்டியில் 739 காளைகளும் 695 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த போட்டியில் பதினாறு காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு காளை அடக்கப்பட்டதற்கும் தனித்தனியாக பல விலையுயர்ந்த பரிசுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்தப்போட்டியில் 14 காளைகளை அடக்கிய ஆயத்தம்பட்டி அழகர்கோவிலைச் சேர்ந்த கார்த்திக் 2-ஆவது பரிசையும், 13 காளைகளை அடக்கிய கணேசன் 3-ஆவது பரிசும் வென்றுள்ளனர். இந்தப்போட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையும் பங்குபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் 16 காளைகளை அடக்கி முதலிடம் வென்ற பிரபாகரனுக்கு இந்தப் போட்டிக்கு இடையே காயம் ஏற்பட்டது.

காளைகளைப் பொறுத்தவரை, முதல் பரிசை மதுரை குலமங்கலம் மார்நாடு காளை முதலிடத்தை வென்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல்பரிசை வென்ற காவல் ஆய்வாளர் அனுராதா என்பவரின் காளை ‘ராவணன்’ இரண்டாம் இடத்தைப் பெற்றது.

இந்தப்போட்டிக்கு இடையே மாடுமுட்டியதில் ஒருவரும், மயங்கி விழுந்ததில் ஒருவரும் என இருவர் மரணமடைந்துள்ளனர். மேலும் பலருக்குக் காயம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் மகிழ்ச்சிக்கு இடையிலும் இந்த சம்பவத்தால் அங்கு சோகம் ஏற்பட்டது.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon