மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

ஜேஎன்யு வன்முறையில் ஏபிவிபி பெண்: சம்மன் அனுப்பிய போலீஸ்

ஜேஎன்யு வன்முறையில் ஏபிவிபி பெண்: சம்மன் அனுப்பிய போலீஸ்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) கடந்த ஜனவரி 5ஆம் தேதி நடந்த மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதலில் பாஜகவின் மாணவர் அமைப்பினர் பங்குபெற்றது உறுதியாகியுள்ளது.

5ஆம் தேதி மாலை மாஸ்க் அணிந்து ஜேஎன்யுவுக்குள் சென்ற மர்ம நபர்கள் அடுத்த சில மணி நேரங்கள் பல்கலை மாணவர்களை சரமாரியாக தாக்கினார்கள். இதில் மாணவர் தலைவர் ஆயிஷ் கோஷ் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இடது சாரி மாணவர்களே காரணமென்று பாஜகவினர் கூறிவந்த நிலையில், ஹிந்து ரக்‌ஷா தள் என்ற அமைப்பு தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்தது. ஆனால், அந்த அமைப்பினர் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் வன்முறையின் வீடியோக்களில் காணப்பட்ட முகமூடி அணிந்த பெண்ணை டெல்லி பல்கலைக்கழக மாணவர் கோமல் சர்மா என அடையாளம் கண்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தௌலத் ராம் கல்லூரியின் மாணவரும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினருமான கோமல் ஷர்மா,கட்டம் போட்ட சட்டை, வெளிர் நீல நிற சால்வை மற்றும் கையில் ஒரு தடியை ஏந்தியிருக்கிறார். சபர்மதி விடுதிக்குள் அவர் மேலும் இரண்டு ஆண்களுடன் மாணவர்களை அச்சுறுத்தியதாகவும் அந்த வீடியோவில் இருப்பதாக டெல்லி போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

ஐபிசி பிரிவு 160இன் கீழ், அவருக்கும், அக்ஷத் அவஸ்தி மற்றும் ரோஹித் ஷா ஆகிய இருவருக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மூன்று பேரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவர்களின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் ஏபிவிபி டெல்லி மாநிலச் செயலாளர் சித்தார்த் யாதவைத் தொடர்பு கொண்டபோது, “கோமல் ஷர்மா எங்கள் அமைப்பில் செயல்படுபவர்தான்” என்பதை ஒப்புக்கொண்டவர், “அவருக்கு எதிராக சமூக ஊடகங்கள் ட்ரோலிங் தொடங்கியதிலிருந்து, நாங்கள் அவளை அணுக முடியவில்லை. எனக்குக் கடைசியாக கிடைத்த தகவல் என்னவென்றால், அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கிறார். அவர் போலீசாரிடமிருந்து சம்மன் பெற்றாரா என்று கேட்க என்னால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

ஜேஎன்யு வன்முறையின் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ்கின்றன.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon