மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

சிறப்புக் கட்டுரை: ஹேப்பி பொங்கல்... யாருக்கு ஃபிரெண்ட்ஸ்?

சிறப்புக் கட்டுரை: ஹேப்பி பொங்கல்... யாருக்கு ஃபிரெண்ட்ஸ்?

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

தை பிறந்தால் வழி பிறக்கும், பொங்கலோ பொங்கல் என்பதெல்லாம் சற்றே வளர்ந்து இன்று, ஹேப்பி பொங்கல் ஃபிரெண்ட்ஸ் என்ற நிலையை எட்டியுள்ளது.

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாள். ஆடிப் பட்டம் தேடி விதைச்ச உழவர் குடிகள் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்று ஆறு மாத காலம் வேளாண் நிலங்களில் உழைத்து, அறுவடை செய்து, தை முதல் நாள் இயற்கைக்கு நன்றி செலுத்துகின்ற திருநாள். அதுதான் தமிழர் திருவிழா.

மழையோடு ஒன்று கலந்த வாழ்க்கைதான் தமிழர்களின் வாழ்வியல். கோடையில் பொன்னேர் பூட்டுதல், பங்குனி உத்திரத்தில் சாஸ்தா எனும் குலதெய்வ வழிபாடு, சித்திரை, வைகாசி தொடங்கி தொடர்ச்சியாக கொடை விழாக்கள், முளைப்பாரி எடுத்தல், மழையை வரவேற்க ஆடி மாதம் மழைக்கஞ்சி அல்லது மழைச்சோறு எடுப்பது, ஆற்றில் அல்லது வாய்க்காலில் நீர் பெருக்கெடுத்து வரும்போது ஆற்றில் நீராடி ஆடிப்பெருக்குக் கொண்டாடுவது, ஆனி, ஐப்பசி மாதங்களில் நாற்று நடவு விழா, தீப்பந்தம் காட்டி மழையை வழியனுப்பி வைக்கும் கார்த்திகை பண்டிகை. வீட்டு முன்பு மாட்டுச் சாணத்தால் மெழுகி அல்லது பூசி, பச்சரிசி மாக்கோலம் போட்டுவிட்டு, அதிகாலையே அறுவடைக்குக் கிளம்பும் மார்கழி, தவசம் எனும் தானியங்களை வீடு வந்து சேர்க்கும்போது, வீட்டுக்கு வெள்ளையடித்து, சாணி மெழுகி, வாசல் தெளித்து, கோலம் போட்டு, சூரியனுக்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டி பொங்கல் வைப்பது. அதைப் பகிர்ந்துண்டு வீர விளையாட்டுகள், பொழுதுபோக்குகளோடு மகிழ்ந்து களிப்பதுதான் தமிழர்களின் பண்பாட்டு நடைமுறைகளாக இருந்துவந்துள்ளன.

பனங்கிழங்கு, சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் தானியங்கள் இல்லாமல் பொங்கல் பண்டிகை இருக்காது.

தைப்பொங்கல் நாளில் நீராடுவதும் சிறப்பு. தை முதல் நாள் தமிழர்கள் ஆறுகளில் நீராடுகிறார்கள். நீர்நிலைகளைத் தேடிச்செல்லும் மனிதர்கள் மட்டுமின்றி, கால்நடைகளைக் குளிப்பாட்டுவதும் வழக்கமாகவே இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலாக வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கருவிகளையும் இயந்திரங்களையும், வீட்டில் உள்ள புழங்கு பொருட்களையும் பாத்திரங்களையும் நீரால் சுத்தப்படுத்தி, துடைத்து மீண்டும் எடுத்து வைப்பதை கிராமங்களில் காணலாம். வாழிடங்களையும் தொழில்களையும் விளையும் பயிர்களையும் சார்ந்து பொங்கல் விழாக்களும் மாறுபடும்.

தைப்பிறக்கும் முன்பே வீட்டையும் காட்டையும் சுத்தப்படுத்தி, தை முதல் நாள் அதிகாலையில் பொங்கப்பூ எனும் கன்னிக்குலையையும் வேப்ப இலையையும் வீட்டின், வாகனத்தின், காட்டின் கிழக்கு மூலையில் வைத்துவிட்டு அதாவது காப்புக்கட்டிய பின்பு, சூரியன் உதிக்கும் நேரத்தில் பொங்கல் வைத்து இயற்கையை வழிபடுவது தமிழர் மரபு. கால்நடைகள் வளர்க்கும் தொழுவத்திலும் தோட்டத்திலும் பொங்கல் வைப்பதும் நடைமுறையில் இருக்கிறது.

ஆனால், இன்று அத்தனையும் மாறிவிட்டது. நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பது, ஆற்றங்கரையோரம் மண்டபங்கள் கட்டிவைத்து அதனருகே நீராடினால் புண்ணியம் என்று சடங்கு, சம்பிரதாயமாக மாற்றிவிட்டார்கள். பொங்கல் பண்டிகை என்றாலே சமத்துவம்தான். இதில் சமத்துவப் பொங்கல் என்று தனியாக வேறு கொண்டாடுகிறார்கள்.

பொங்கல் வந்துவிட்டால், அரசு ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் மாதசம்பளம், வார சம்பளம் வாங்குபவர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படுகிறது. சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கிறது. நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கிறார்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நடிகர்கள், நடிகைகள் பொங்கல் வைப்பதுவும், தங்களது திரை அனுபவங்களைப் பேசுவதும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. தமிழர் திருநாள் தை முதல்நாளில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் குடும்பங்களை ஆக்கிரமித்து விடுகின்றன.

உச்ச நட்சத்திரங்களின் புதிய திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகி வசூலை அள்ளிக் குவிக்கின்றன. ஜோதிடம், சமையல் குறிப்புகள், திரைப் பிரபலங்களின் செய்திகளோடு தினசரி, வார, மாத இதழ்களின் சார்பில் பொங்கல் சிறப்பு மலர்கள் வெளியாகின்றன. வெளியூர் சென்றுவர சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகள் இருமடங்கு, மும்மடங்கு கட்டணத்துடன் கொள்ளை லாபம் அடைகின்றன. அரசு பொங்கல் பரிசும் ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கிறார்கள். கூடவே டாஸ்மாக் மதுபான விற்பனைக்கும் இலக்கு நிர்ணயம் செய்கிறார்கள்.

முதல்நாள் தைப்பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி, கிழங்குகளோடு பொங்கல் குழம்பு வைத்து சாப்பிடுவது, இரண்டாம் நாள் கால்நடைகளுக்குப் பொங்கல் வைத்து, வீர விளையாட்டுகள், மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு நடத்தி களிப்படைவது, மூன்றாம் நாள் கரிநாள் ஆடு, கோழி அசைவ உணவுகள் சமைத்து உண்பது, காணும் பொங்கல் என்ற பெயரில் நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்து உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வது என்று ஒருவார காலம் கொண்டாடிய பொங்கல் பண்டிகை, இன்று நேரிடையாக வாழ்த்து சொல்வதில் இருந்து அப்படியே வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்வது, செல்போனில் குறுஞ்செய்திகள் அனுப்புவது என மாறிக்கொண்டே போய் டிக்டாக் வீடியோ, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வந்து நிற்கிறது.

பண்டிகை நாளில் அத்தனை பேரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள் நெல் விதைத்து, நாற்று நட்டு, வயல்கள் பெருமழையால் மூழ்கிப்போன காவிரி டெல்டா விவசாயிகளைத் தவிர... கம்பு, சோளம், உளுந்து, பாசிப்பயறு, பருத்தி, மிளகாய் விளைய வைத்து மழையாலும், பனியாலும் மக்கிப்போன தென்மாவட்ட மானாவாரி விவசாயிகளைத் தவிர... பூக்கள், காய்கறி பயிரிட்டு காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளைத் தவிர... கிழங்கு, தானியம், கரும்பு அறுவடைக்கு சரியான நேரமின்மையால் தவிக்கும் மேற்கு மாவட்ட விவசாயிகளைத் தவிர... விளைவித்த விவசாயப் பொருட்களுக்குச் சரியான விலை கிடைக்காமல் தவிக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு விவசாயிகளைத் தவிர, அத்தனை பேரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். காலத்தே விதைக்கவும் முடியவில்லை, அறுக்கவும் முடியவில்லை. பருவம் தப்பி பெய்கின்ற மழை, பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் வேளாண்மையிலும் பாதிப்புகளை உண்டாக்கிச் செல்கிறது. காப்பீடு செய்தால் போதும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நாமும் நம்பிக்கொண்டே இருக்கிறோம்.

உழவர்களின் திருவிழாவை, தமிழ் இனத்தின் பெருவிழாவை, ரேஷன் கடையில் வரிசையில் நின்று அரிசி வாங்கி குக்கரில் பொங்கல் வைத்து கொண்டாடுவோம். நேரலையில் ஜல்லிக்கட்டு பார்ப்போம். சினிமா, டிவியில் மூழ்கிய நேரத்தில் கொஞ்சம் மிச்சமிருந்தால் பொழுதுபோக்கு இடங்களையும் சுற்றி வருவோம். அரசின் இலக்கை அடைவதற்கு டாஸ்மாக் கடைக்கும் சென்று நாட்டின் வருமானம் பெருக்குவோம். ஹேப்பி பொங்கல் ஃபிரெண்ட்ஸ். சியர்ஸ்!

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 ஜன 2020