மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

அரசியல் கெட்டுவிட்டது: துக்ளக் மேடையில் ரஜினி

அரசியல் கெட்டுவிட்டது: துக்ளக் மேடையில் ரஜினி

அரசியலும் சமுதாயமும் கெட்டுப்போய்விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (ஜனவரி 14) நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர். 50ஆவது ஆண்டு விழா மலரை வெங்கையா நாயுடு வெளியிட முதல் பிரதியை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

முதலில் பேசிய குருமூர்த்தி, “இந்தியாவில் முழுமையான இந்து மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால், தமிழக இந்துக்கள் அரசியல் ரீதியாக இந்துக்களாக இல்லை. இந்து எதிர்ப்பு நிலை தமிழகத்தில் இருப்பதாகச் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தற்போதைய நிலையில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்துவிட்டது. காசு கொடுக்காமல் அவர்களுக்குக் கூட்டம் கூடுவதில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ளன. இது ஆபத்தானது. ஜேஎன்யுவின் டிஎன்ஏ நாட்டுக்கு எதிரானது. அது திருத்தப்பட வேண்டிய ஒன்று. இல்லையென்றால் மூடப்பட வேண்டிய ஒன்று” என்று கூறியவர், “சோ எதையும் வெளிப்படையாகச் செய்வார். நான் எதையும் வெளிப்படையாகச் செய்ய மாட்டேன். அதனால் வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் பங்கு வகிப்பேனா என்பது பற்றி இங்கு சொல்ல மாட்டேன்” என்றும் தெரிவித்தார்.

அடுத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “சோ துக்ளக் வாசகர் பட்டாளத்தை உருவாக்கவில்லை. அவர் ஓர் இனத்தையே உருவாக்கினார். முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்ததால் அவர்கள் அறிவாளி ஆனார்களா அல்லது படித்ததால் ஆனார்களா என்பது தெரியவில்லை. சோவை வளர்த்துவிட்ட இருவர் பக்தவத்சலமும், கலைஞரும்தான். கலைஞர் துக்ளக் பத்திரிகைக்கு இலவச விளம்பரம் செய்ததாக சோவே சொல்லியிருக்கிறார். தமிழகம் தெரிந்துவைத்திருந்த சோவை இந்தியா முழுவதும் தெரியவைத்தது இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சிதான்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “இப்போது சோ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் மிக மிக அவசியம். அரசியல் மிகவும் கெட்டுப்போய்விட்டது. சமுதாயமும் கெட்டுப்போய்விட்டது. அவர்களால்தான் நாட்டைக் காப்பாற்றவும், திருத்தவும் முடியும்” என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், “நடுநிலை ஊடகங்கள் உண்மை எதுவோ, நியாயம் எதுவோ அதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பத்திரிகைகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரைக் கலக்கக் கூடாது. எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 ஜன 2020