மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

என்பிஆர், என்ஆர்சி: அடுத்த போராட்டத்துக்குத் தயாராகும் ஸ்டாலின்

என்பிஆர், என்ஆர்சி: அடுத்த போராட்டத்துக்குத் தயாராகும் ஸ்டாலின்

என்பிஆர், என்ஆர்சி பணிகளை அனுமதிக்க மட்டோம் என முதல்வர் அறிவிக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே கடந்த 25ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பித்தல் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கும் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது. என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

எனினும் இதுதொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “என்பிஆர், என்ஆர்சி விவகாரத்தில் தமிழக மண்ணில் பிறந்த எந்தவொரு சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், அரசியல் லாபத்துக்காகச் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டுள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் என்பிஆர், என்ஆர்சி தொடர்பாக நேற்று (ஜனவரி 14) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “நாடு முழுவதும் மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் அதிமுக அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“என்ஆர்சிக்கு மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிதிஷ்குமார் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துவிட்டார். தன் சொந்தக் கட்சி என்றுகூட பாராமல் அசாம் மாநில பாஜக முதல்வரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் அதிமுக அரசும், முதல்வரும் தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுவதற்கு ஆதரவாக இருப்பதும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு வழி விடுவதும் கடும் கண்டனத்திற்குரியது” என்று கூறியுள்ள ஸ்டாலின்,

“குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்களித்து வெற்றிபெற வைத்தது அதிமுக. நாட்டையே ரணகளமாக்கியுள்ள சட்டத் திருத்தத்துக்கு ஆதரவளித்து விட்டு, இன்றைக்கு ‘மக்களுக்கு பாதிப்பு இல்லை’, ‘என்பிஆர், என்ஆர்சி பற்றி எங்களுக்கு அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை’ என்றெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி வருவதை உடனடியாக அதிமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, “தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும். அதிமுக அரசு தொடர்ந்து அமைதி காத்தால், விரைவில் மாபெரும் போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் திமுக நடத்திடும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்டாலின்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 ஜன 2020